×

கூவத்தில் 3 நாளுக்கு முன்பு குதித்து தற்கொலை: கூலி தொழிலாளி உடல் மீட்பு

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை பாலத்தில் இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கூலி தொழிலாளியின் உடலை 3 நாட்களுக்கு பிறகு போலீசார் மீட்டனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை காந்தி இர்வின் சாலை அருகே உள்ள கூவம் ஆற்று பாலத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர், பாலத்தின் மீது இருந்து கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்படி சிந்தாதிரிப்பேட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஆற்றில் குதித்த நபரை மீட்க முயன்றனர்.

ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை. அதைதொடர்ந்து தேடுதல் வேட்டையை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட நபர் யார் என்பது குறித்து, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், எழும்பூர் எம்.எஸ்.எல்.லேன் பகுதியை சேர்ந்த நற்குணம் (44) என்றும், இவருக்கு மனைவி உமா மற்றும் ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது. கூலி தொழிலாளியான இவர், மனைவி உமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஏகவல்லி என்பவருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

நற்குணம் சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். கடும் மன வேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் கூவம் ஆற்றில் குதித்தது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தேடி வந்த நற்குணம் உடல் பல்லவன் இல்லம் அருகே உள்ள கூவம் ஆற்று கரையோரம் நேற்று அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கூவம் ஆற்றில் உடலை எடுக்கும் போது, அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் நின்று வேடிக்கை பார்த்ததால் சிறிது நேரம் பல்லவன் இல்லம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post கூவத்தில் 3 நாளுக்கு முன்பு குதித்து தற்கொலை: கூலி தொழிலாளி உடல் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Koovam river ,Chindathiripet bridge ,
× RELATED திருவேற்காடு கூவம் ஆற்றங்கரையோரம்...