×

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யக்கோரி தொழிலதிபரிடம் ரூ.3.61 கோடி பணம் மோசடி: மேற்குவங்க பெண் உள்பட 3 பேர் கைது

சோழிங்கநல்லூர்: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பார்க் டவுன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் புகார் அளித்தார். அதில், மேற்குவங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் ‘கிரிப்டோ கரன்சியில்’ முதலீடு செய்தால் வருங்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று எனது செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். பிறகு என்னை நம்ப வைக்கும் வகையில் அடுத்தடுத்து 2 பேர் பேசி, கிரிப்போ கரன்சியில் முதலீடு செய்த விஐபிக்கள் குறித்து படத்துடன் கூறினர். அவர்களின் ஆசை வார்த்தையை நம்பி நான் அவர்கள் சொன்ன வங்கி கணக்கிற்கு பல தவணையில் ரூ.3.61 கோடி வரை டெபாசிட் செய்தேன். ஆனால் அவர்கள் கூறியபடி எனக்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தது குறித்து எந்த தகவலும் அவர்கள் தெரிவிக்கவில்லை.

தொடர்ந்து அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, மோசடி செய்த நபர்களிடம் இருந்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். அதன்படி சைபர் க்ரைம் போலீசார், மோசடி நபர்களுக்கு ரூ.3.61 கோடி பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மோசடி நபர்கள் 3 பேர் பேசிய செல்போன் எண்கள், இ-மெயில் விவரங்களை பெற்று விசாரணை நடத்தினர்.

அப்போது குற்றவாளிகள் மேற்குவங்கத்தில் தொழிலதிபர் அனுப்பிய பணத்தை அவர்களின் வங்கி கணக்கில் இருந்து அடிக்கடி எடுத்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை பெற்று ஆய்வு செய்த போது, கொல்கத்தா கோசிப்பூர், பரா நகரை சேர்ந்த ரூபா ஷா (47), ஹூக்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் சோனி (38), விஜய் சோனி (41) என தெரியவந்தது. அதைதொடர்ந்து சைபர் க்ரைம் போலீசாரின் தனிப்படை மேற்குவங்கம் சென்று, அங்குள்ள போலீசாரின் உதவியுடன் 3 குற்றவாளிகளையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் தனிப்படை போலீசார் மேற்குவங்க சேராம்பூர் மற்றும் பராக்பூர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு அவர்களை சிறையில் அடைத்தனர்.

The post கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யக்கோரி தொழிலதிபரிடம் ரூ.3.61 கோடி பணம் மோசடி: மேற்குவங்க பெண் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sozhinganallur ,Parktown ,Chennai Police Commissioner's Office ,West Bengal ,
× RELATED போலி நகைகளை அடகு வைத்து ரூ.12.39 லட்சம்...