×

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே வன பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்: உடனடியாக நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் கடும் அமளிக்கு இடையே, சர்ச்சைக்குரிய வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. உடனடியாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தாததால் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவை நேற்று கூடியதும், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒன்றிய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணி தரப்பில் தரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர், மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பிறப்பு, இறப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது உள்ளிட்ட 6 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அப்போது அமளியால் அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியதும், சர்ச்சைக்குரிய வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மழைக்கால கூட்டத் தொடரில் மொத்தம் 31 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மணிப்பூர் விவகாரத்தில் கடும் அமளி நிலவினாலும், அமளிக்கு நடுவே முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில், பல்வேறு தரப்பினரும் எதிர்க்கும் வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா அமளிக்கு மத்தியில் சிறிய விவாத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடர்ந்து மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த திருத்த மசோதாவில், சா்வதேச எல்லைப் பகுதிகளில் இருந்து 100 கி.மீ. வரை உள்ள 10 ஹெக்டேர் அளவிலான வனப் பரப்புகள், வனப் பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.
மேலும், இடதுசாரி பயங்கரவாதம் காணப்படும் பகுதிகளில் 5 ஹெக்டேர் அளவிலான வனப் பரப்புகளுக்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் பழங்குடியினருக்கான பள்ளிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இது வனப் பகுதிகள் மீது பழங்குடியினர். கொண்டுள்ள உரிமைகளைப் பெருமளவில் பாதிக்கும் என ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வனப் பகுதிகளுக்கு நடுவே மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். பழங்குடிகளிடம் இருந்து வன நிலங்களை பறித்து கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கவே இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

இதே போல மாநிலங்களவையிலும் மணிப்பூர் விவகாரத்தில் நேற்று கடும் அமளி நிலவியது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே பேசுகையில், ‘‘மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் தர வேண்டும். அதைத் தொடர்ந்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் 5 நாட்களாகியும் பிரதமர் மோடி அவைக்கு வராமலேயே உள்ளார். அவரது அலுவலகத்தில் இருந்தபடியே நாடாளுமன்ற நிகழ்வுகளை பார்க்கிறார். ஏன் அவர் விளக்கம் தர மறுக்கிறார்? இதனால் மணிப்பூர் குறித்த எங்கள் கருத்துக்களை அவையில் எடுத்துரைக்க முடியாமல் உள்ளது. எதிர்க்கட்சிகளின் எந்த கோரிக்கைக்கும் அரசு செவிசாய்ப்பதில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்’’ என்றார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

* உங்களுக்கு எங்கள் ஆதரவு
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதற்காக மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எம்பி சஞ்சய் சிங்கை பார்த்து, ‘‘உங்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கிறது’’ என்று கூறிச் சென்றார்.

* காங். எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு
டெல்லியில் அரசு நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதற்கான அவசர சட்டத்திற்கு பதிலாக டெல்லி சேவைகள் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மாநிலங்களவையில் இன்று இந்த மசோதா மீது முக்கியமான விவாதம் நடக்கலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் கட்டாயம் கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டுமென அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த மசோதாவை மாநிலங்களவையில் தோற்கடிக்க டெல்லியில் ஆளும் ஆம்ஆத்மி அரசு அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இன்று கருப்பு உடை
மணிப்பூர் விவகாரத்தில் இதுவரை பிரதமர் மோடி விளக்கம் அளிக்காததை கண்டிக்கும் வகையில், இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஸ்மிருதி அதிரடி சவால்
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் பெண் எம்பி அமி யாஜ்னிக் எழுந்து, ‘‘மணிப்பூரில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் குறித்து ஒன்றிய பெண்கள் நலத்துறை அமைச்சர் பேசுவாரா?’’ என கேட்டார். அதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘இதற்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கிறேன். பெண் அமைச்சர்களும், பெண் அரசியல் தலைவர்களும் மணிப்பூர் மட்டுமல்ல, ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் பீகார் மாநிலங்களைப் பற்றியும் பேச வேண்டும். ராஜஸ்தான், சட்டீஸ்கர், பீகார் பற்றி விவாதிக்க உங்களுக்கு எப்போது தைரியம் வரும்? காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்கள் எப்படி பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என்பதை சொல்ல உங்களுக்கு எப்போது தைரியம் வரும்? மணிப்பூர் பிரச்னையில் ராகுல் எப்படியெல்லாம் தீப்பற்ற வைத்தார் என்பதை சொல்ல உங்களுக்கு எப்போது தைரியம் வரும்? பெண் அமைச்சர்கள் மீது அவதூறு பரப்ப வேண்டாம்’’ என்றார். இதற்கு பாஜ எம்பிக்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

The post மக்களவையில் கடும் அமளிக்கு இடையே வன பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்: உடனடியாக நாள் முழுவதும் அவை ஒத்திவைப்பு; மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Rajya Sabha ,NEW DELHI ,Manipur ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற இணையதளத்தை எம்பிக்கள்...