×

ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திருப்பதால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது: தூர்தர்ஷன் தெரிவித்ததாக சட்டமன்ற செயலாளர் ஐகோர்ட்டில் தகவல்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு சட்டமன்ற செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளில் தன்னையும் இணைத்து கொள்ளக்கோரி அதிமுக தலைமை கொறடா எஸ்.பி. வேலுமணியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சட்டப்பேரவை செயலாளரின் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், சபாநாயகரின் ஒப்புதலுடன், ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை உரை உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற நிகழ்வுகள் தூர்தர்ஷன், ஆல் இந்திய ரேடியோ மூலமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆளுநர் உரை, பட்ஜெட், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்ளுக்கு பதில் அளிப்பது, அரசு 110விதியின் கீழ் வெளியிடும் அறிவிப்புகள் சபாநாயகரின் ஒப்புதலுடன் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. சட்டமன்ற நிகழ்வுகள் படிப்படியாக நேரடி ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

2022 ஜனவரி 6ம் தேதி முதல், கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 2023 ஏப்ரல் 12ம் தேதி முதல் கவன ஈர்ப்பு தீர்மானங்கள், முக்கிய தீர்மானங்களின் விவாதங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்ய கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு ரூ.44 லட்சத்து 65,710 நிதி அளிக்கப்பட்டுள்ளது. நேரடி ஒளிபரப்புக்காக ஆப்டிக் பைபர் கேபிள் அமைக்கும் நடைமுறையை தூர்தர்ஷன் தொடங்கியுள்ளது. இப்பணிகளுக்கு ஒன்றிய அரசு நிதிக்காக காத்திருக்கிறோம். இதனால், தற்போது சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய இயலாது என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி. வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே ஒளிப்பரப்புகிறார்கள். கேள்வி நேரத்தின் போது கேட்கப்படும் கேள்விகளை ஒளிபரப்பாமல் அமைச்சர்கள் பதில் அளிப்பதை மட்டும் ஒளிபரப்புகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளோம் என்று தெரிவித்தார். இதையடுத்து, சட்டப்பேரவையில் சபாநாயகரின் முடிவை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்ற போதும், சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்படி சபாநாயகருக்கு உத்தரவிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்று கேள்வி எழுவதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திருப்பதால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய முடியாது: தூர்தர்ஷன் தெரிவித்ததாக சட்டமன்ற செயலாளர் ஐகோர்ட்டில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Doordarshan ,Assembly ,ICourt ,Chennai ,Tamil ,Nadu assembly ,Tamil Nadu Assembly ,Assembly Secretary ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...