×

குமரி மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்கம்: கலெக்டர், அதிகாரிகளுடன் அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1000 புதிய பஸ்களை வாங்கவும், மேலும் 500 பழைய பஸ்களை அரசு செலவில் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் விழுப்புரம், கும்பகோணம் மற்றும் திருநெல்வேலி கோட்டத்தில் 2022-23ம் நிதியாண்டில் பஸ்கள் முழு பாகம் சீரமைப்புக்கு பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பஸ்களை புதுப்பித்து தனியார் பஸ்களுக்கு இணையாக சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை போன்று புதிய பஸ்கள் வாங்கி இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகங்களில் பயன்பாட்டில் இருந்து முழுபாகம் சேதமடைந்த, ஒழுகும் நிலையில் இருந்த பஸ்கள் புதுப்பிக்க டென்டர் விடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனுடன் பழைய வண்ணம் மாற்றப்பட்டு மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இருக்கைகள் ஜன்னல்கள் மற்றும் ரீடிங் விளக்குகள் தரம் உயர்த்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ரெக்ஸீன்கள் கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதால் இவை எளிதில் அழுக்கு அடைவது இல்லை. முழுக்க முழுக்க புதியதாக பஸ் பாடி கட்டப்பட்டுள்ளதால் பளிச்சென்று காணப்படுகிறது. தனியார் பஸ்களுக்கு போட்டியாக வடிமைப்பும், தரமும் அமைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து மொத்தம் 50 பஸ்கள் சேஸ்கள் முழு சீரமைப்புக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக அவற்றில் 25 சேஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் 2 பஸ்கள் புதியதாக பாடி கட்டப்பட்டு நாகர்கோவில் ராணித்தோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்து சேர்ந்துள்ளது. மேலும் பஸ்கள் வர வேண்டியுள்ளது. இவை தவிர புதிய பஸ்களும் வர இருக்கிறது. சென்னை, கரூர், திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பஸ்கள் பாடி கட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளன.

ஒரு பஸ் முழு பாகம் புதுப்பிக்க டவுன் பஸ்க்கு ரூ.15.75 லட்சம், மொபசல் பஸ்க்கு ரூ.15.20 லட்சம், படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.14.44 லட்சம் செலவிடப்படுகிறது. மாநில போக்குவரத்து நிறுவனங்கள் வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 500 பஸ்களை சீரமைக்க மட்டும் மொத்த மதிப்பீடு ரூ.74.34 கோடி ஆகும்.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலர்களுடன் புதிய பேருந்து இயக்கம் தொடர்பாக அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை நடத்தினார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஜெரோலின் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். குமரி மாவட்டத்தில் வருகை தர இருக்கும் புதிய பேருந்துகளை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் மக்கள் வசதிக்கு ஏற்ப இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

The post குமரி மாவட்டத்தில் புதிய பேருந்துகள் இயக்கம்: கலெக்டர், அதிகாரிகளுடன் அமைச்சர் மனோதங்கராஜ் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Kumari District ,Minister ,Manothankaraj ,Nagargo ,Tamil Nadu Government ,Manodankaraj ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...