×

நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 2,500 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட நீர் நேற்று 22,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.இந்த உபரிநீர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.

அங்கிருந்து ஒகேனக்கல் வந்தடைந்த காவிரி நீர் அருவிகளில் செந்நிறத்தில் பெருக்கெடுத்து கொட்டியது. ஒகேனக் கல்லில் நேற்று காலை 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 6 மணிக்கு 3,000 கனஅடியானது. இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6,000 கனஅடியாக இருந்த நிலையில், பகல் 12.30 மணியளவில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று 119 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 177 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் நீர்திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது. நேற்று 66.86 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 65.80 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 29.19 டிஎம்சியாக உள்ளது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி யுள்ளதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று மாலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நீர்வரத்து குறித்து துல்லியமாக கணக்கிட்டு வருகின்றனர்.

The post நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.

Tags : Canadi ,Ohenacale ,Mattur ,Karnataka ,Kaviri ,Kudagu district ,Kerala ,Wayanad ,Canadians ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையில் இருந்து காவிரி...