×

வரும் 30ம்தேதி முதல் ஆக.1ம்தேதி வரை தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

நெல்லை: திருச்சி பணிமனையில் நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக தென்மாவட்ட ரயில்கள் இம்மாத இறுதியில் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. திருச்சி பணிமனையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஆகஸ்ட் 1ம்தேதி வரை அவ்வழியாக செல்லும் வைகை, பல்லவன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி தென்மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாக செல்லும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. அதன்படி வரும் 30ம்தேதியன்று சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் பெரம்பூர், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும், வரும் 31ம்தேதி விருத்தாச்சலம், கடலூர், திருவாரூர், காரைக்குடி வழியாகவும், ஆகஸ்ட் 1ம்தேதியன்று விருதாச்சலம், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாகவும் இயக்கப்பட உள்ளது. நெல்லை வழியாக செல்லும் நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ்(16352) வரும் 30ம்தேதியன்று திண்டுக்கல், கரூர், சேலம், ஜோலார்பேட்டை வழியாக மும்பை செல்கிறது.

மாதா வைஷ்ணவி தேவி கட்ராவில் இருந்து நெல்லைக்கு வரும் எக்ஸ்பிரஸ் (எண்.16788) நாளை 27ம்தேதி மற்றும் 30ம்தேதிகளில் கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படுகிறது. இதுபோல் நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக கச்சுகுடா செல்லும் வாராந்திர ரயிலும் வரும் 29ம்தேதியன்று திருச்சி செல்லாமல், திண்டுக்கல், கரூர் வழியாக இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இதே ரயில் (எண்.16353) வரும் 30ம்தேதியன்று சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக நெல்லை, நாகர்கோவிலுக்கு வந்து சேரும். தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரஸ் (எண்.06011) வரும் 31ம்தேதியன்று திருச்சி செல்வதற்கு பதிலாக விருதாச்சலம், சேலம், கரூர் வழியாக இயக்கப்படும். எனவே தென்மாவட்டங்களில் இருந்து திருச்சி சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் பயணிகள் 3 தினங்களும் ரயில்களின் வழித்தடங்களை அறிந்து பயணிக்குமாறு தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.

The post வரும் 30ம்தேதி முதல் ஆக.1ம்தேதி வரை தென்மாவட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : South ,District ,Paddy ,Trichy ,1Md ,Dinakaran ,
× RELATED தென் கொரிய எல்லைப்பகுதியில் ராட்சத...