×
Saravana Stores

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு

டெல்லி: அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி ஒன்றிய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகு 3 முறை அவருக்கு ஒன்றிய அரசு பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது. 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ராவின் சொந்த மாநிலம் உத்தரபிரதேசம். 1984ம் ஆண்டு ஐஆர்எஸ் அதிகாரியான அவர் டெல்லியில் உள்ள வருமானவரித்துறை தலைமை கமிஷனராக இருந்தார். அவர் 2018 நவம்பர் 19ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

இந்த பதவி 2 ஆண்டுகள் வகிக்கக்கூடியது. அவரது பதவிக்காலம் முடிந்தபின் 2020 நவம்பர் 13ம் தேதி மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டது. அந்த காலமும் முடிந்த பின்னர் 2021 நவம்பர் 17ல் மேலும் ஓராண்டு நீட்டிப்பு வழங்கியது. அதோடு இனிமேல் அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்று ஒன்றிய அரசு திருத்தி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், விக்ரம்நாத், சஞ்சய் கரோல் அடங்கிய அமர்வு விசாரித்தது. ஏற்கனவே அமலாக்கத்துறையை ஏவி ஒன்றிய அரசு பழிவாங்கி வருவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு 3வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் ஜூலை 31 வரை பதவியில் நீடிக்க கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையொட்டி, அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது

The post அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்கே மிஸ்ராவுக்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு appeared first on Dinakaran.

Tags : Union Government ,Supreme Court ,Director of Enforcement ,SK Misra ,Delhi ,Sanjaykumar Misra ,SK ,Misra ,Enforcement ,Dinakaran ,
× RELATED தேர்தல் இலவசங்களை லஞ்சமாக அறிவிக்க...