×

கொதிக்கும் மழுவும் காப்பியமும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பி.என்.பரசுராமன்

தமிழில் ஐம்பெருங்காப்பியங்களில் மூன்றாவதாகச் சொல்லப்படுவது, சிந்தாமணி. இதன் ஆசிரியர், ‘திருத்தக்கதேவர்’. இவர் சமணத்துறவி. படிக்க வேண்டிய அறநூல்களை எல்லாம் சந்தேகமறக் கற்றுத் தேர்ந்தவர். வட மொழியிலும், தமிழ்மொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். துறவுநெறி மேற்கொண்டு வாழ்ந்து வந்த திருத்தக்க தேவர், குருபக்தியில் தலை சிறந்தவராக இருந்தார். துறவியாக இருந்தாலும், உலக அறிவு நிறைந்த உத்தமமான கவிஞராகவும் விளங்கினார், திருத்தக்க தேவர்.

இவர் காலம், 10-ஆம் நூற்றாண்டு. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் காப்பியங்களுக்கு இணையாகத் திருத்தக்கதேவரின் ‘சிந்தாமணி’ நூல் வைத்துப் போற்றப்படுகிறது என்றால், திருத்தக்க தேவரின் உயர்வு, எந்த அளவிற்கு இருந்தது என்று விளங்கும். சிறு வயதிலிருந்தே, உலகப்பற்றைத் துறந்து உத்தமமான துறவியாக இருந்த திருத்தக்க தேவர், இன்ப நூலான ‘சிந்தாமணி’யை எழுதியதே, ஓர் அற்புதமான வரலாறு.

ஒரு சமயம் திருத்தக்க தேவர், தன் குருநாதருடன், மதுரைக்குச் சென்றிருந்தார். அங்கு பழங்காலத்தைப் போலவே, பத்தாவது நூற்றாண்டிலும் தமிழ் அறிஞர்கள் சிலர் கூடி, தமிழ்ச் சங்கத்தில் தமிழாராய்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். குருநாதருடன் அங்கு போயிருந்த திருத்தக்க தேவர், அந்தப் புலவர்களுடன் கூடிப்பேசி மகிழ்ந்தார். அப்போது, மதுரைத் தமிழ்புலவர்கள் சிலர், ‘‘துறவற நெறி பற்றிய பாடல்கள் பாடுவதில், சமணப் புலவர்கள் திறமைசாலிகள்! உண்மைதான்! ஒப்புக்கொள்கிறோம். ஆனால், காதல்சுவை நிறைந்த, இன்பத்துறை பற்றிய இனிய பாடல்களைப் பாடுவதில் சமணப் புலவர்களுக்குத் திறமை கிடையாது என்பதே எங்கள் எண்ணம்.

திருத்தக்கதேவரே! இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று கேட்டார்கள்.அதற்குத் திருத்தக்க தேவர் பதில் சொன்னார்; ‘‘புலவர்களே! நீங்கள் நினைப்பது தவறு. நீங்கள் நினைப்பதைப் போல, சமணப் புலவர்கள் காதல் காவியம் பாடச் சக்தி அற்றவர்கள் இல்லை. அவர்கள் காதல் காவியம் பாடாததற்குக் காரணம், அதை வெறுத்து ஒதுக்கியதால்தான்!’’ என்றார் திருத்தக்கதேவர். மதுரைப் புலவர்கள் அதை ஏற்கவில்லை. ‘‘திருத்தக்கதேவரே! நீங்களும் ஒரு சமணத்துறவியாகவும், தமிழ்ப் புலவராகவும் இருக்கிறீர்கள்.

ஆகையால், நீங்கள் சொல்வதைப் போல, இன்பச் சுவை ததும்பும் காதல் காவியம் ஒன்றைப்பாட, உங்களால் முடியுமா?’’ எனக் கேட்டார்கள். திருத்தக்கதேவர், அவர்களின் சவாலை ஏற்றார். ‘‘தாராளமாக! நீங்கள் சொல்வதைப் போலவே பாடிக் காட்டுகிறேன்’’ என்றார்.திருத்தக்க தேவரின் திறமை, அந்தப் புலவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் குருநாதருக்குத் தெரியும் அல்லவா? தன் சீடன் பாடிவிடுவான் என்பது, அந்தக் குருநாதருக்குத் தெரியும்.

இருந்தாலும், தன் சீடனின் மனநிலையை அறியத் தீர்மானித்தார் குருநாதர். குருநாதரும் சீடருமாக வந்து கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக ஒரு நரி ஓடியது. அந்த நரியைத் தன் சீடனுக்குக் காண்பித்த குருநாதர், ‘‘சீடனே! அந்த நரியைப் பார்! அதையே பொருளாகக் கொண்டு, ஒரு காவியம் பாடிக்கொண்டு வா! அதன் பிறகு பெருங்காவியம் பாடலாம் நீ!’’ என்றார். ‘‘அப்படியே செய்கிறேன் குருதேவா!’’ என்றார் திருத்தக்க தேவர்.

சொன்னது மட்டுமல்ல! நரியைப் பாடு பொருளாகக் கொண்டு, ‘நரி விருத்தம்’ எனும் தலைப்பில் ஒரு சிறு நூலை அன்றே எழுதி முடித்தார். எழுதி முடித்ததைக் கொண்டு வந்து, குருநாதரிடம் சமர்ப்பித்து வணங்கினார்.நரி விருத்தம் எனும் அந்த நூல், அளவில் சிறியதாக இருந்தாலும், பெரும்பெரும் உண்மைகள் எளிய, இனிய தமிழ் நடையில் அமைந்துள்ளது.

பற்பல கதைகள் நிறைந்த நூல் அது. அதில் இருந்து ஒரு கதை. அடர்ந்த பெருங்காடு! அங்கே வேட்டைக்குப் போன வேடர் ஒருவர், யானையின் மீது வலிமையான விஷம் தடவப்பட்ட ஆயுதத்தை வீசினார். தாக்கப்பட்ட யானை, வேடரைத் துரத்தியது. பயந்து ஓடத் தொடங்கிய வேடரின் கால், ஒரு பாம்புப்புற்றை மிதிக்க, புற்றிலிருந்து வெளிப்பட்ட பாம்பு, வேடரைத் தீண்டியது.

அந்தப் பாம்பையும் வெட்டி வீழ்த்தினார் வேடர். அதற்குள் விஷம் ஏறி, கையில் வில்லுடன் கீழே விழுந்து இறந்தார். துரத்தி வந்த யானையும், வேடர் வீசிய விஷ ஆயுதத்தின் வேகம் தாங்காமல் இறந்து விழுந்தது. ஒரே இடத்தில் பாம்பு, வேடர், யானை எனும் மூவரும் இறந்து கிடந்தார்கள். அந்த வேளையில் அந்தப்பக்கமாக வந்த ஒரு நரி, இறந்து கிடந்த மூவரையும் பார்த்தது; வேடர் கையில் இருந்த அவர் வில்லையும் பார்த்தது. நரிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

‘‘அப்பாடா! இன்று நமக்கு அற்புதமான வேட்டைதான்! யானை நமக்கு ஆறுமாத உணவுக்கு ஆகும். வேடனின் உடம்போ, ஒரு வாரத்திற்காவது தாங்கும். பாம்போ, ஒரு நாளைக்கு உணவாகும். இன்னும் கொஞ்சகாலம் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இல்லை. அதற்கு முன்னால், இப்போது இந்த வேடனிடம் இருக்கும் வில்லின் நாண் கயிற்று நரம்பைக் கடித்துத் தின்று, இப்போதைய பசியைத் தீர்த்துக் கொள்ளலாம்!’’ என்று எண்ணி, வேடர் அருகிலிருந்த வில்லின் நாண் கயிற்றைக் கடித்தது நரி. விளைந்தது விபரீதம்! நாண் கயிறு அறுக்கப் பட்டவுடன், வளைந்திருந்த வில் ‘படீர்’ என நிமிர்ந்து, நரியின் வாயைப் பிளந்தது; நரி இறந்தது.

‘‘ஆறு மாத காலத்திற்கான உணவு, இதோ! இருக்கிறது. ஹ! இனி நமக்கு ஏது கவலை?’’ என்று இறுமாப்புடன் இருந்த நரி, இறந்து விழுந்தது. இந்தக் கதையை நரி விருத்தத்தில் சொன்ன திருத்தக்கதேவர், ‘‘நாளைக்கு நாளைக்கு என்று சேமித்து வைத்த வீணர்களே! உலக மக்களே!அரிது முயன்று பொருளைப் பெரிதாகச் சேர்த்தும், ஒரு நாள்கூட உண்டு பயன் பெறாமல், ஏழை – எளியவர்களுக்குக் கொடுத்து மகிழாமல், ஏன் வீணாக இறக்கிறீர்கள்? இறைவன் திருவடியைத் தொழுது கடைத்தேறுங்கள்! கையில் உள்ளபோதே, தர்மம் செய்து நற்கதி அடைய முயலுங்கள்!’’ என்று கூறி முடிக்கிறார்.

குருநாதர் ஆணைப்படி, எழுதப்பட்ட அந்த ‘நரி விருத்தம்’ எனும் நூலைக் குருநாதரிடம் சமர்ப்பணம் செய்து, ‘‘குருநாதா! அடியேன் பெருங்காவியம் பாட, ஆசி கூறுங்கள்!’’ என வேண்டினார். நூலை நன்கு படித்த குருநாதர் மகிழ்ந்தார். பெருங்காவியம் பாட அனுமதியும் ஆசியும் அளித்தார். கூடவே, ‘செம்பொன் வரை மேல் பசும்பொன் எழுந்திட்டதே போல்’ எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றைப் பாடித்தந்து, ‘‘இதைப் பின்பற்றிப் பாடுக!’’ என்று சொல்லி ஊக்கப்படுத்தினார் குரு.

குருநாதரின் ஆசியும் அனுமதியும் பெற்ற திருத்தக்க தேவர், குருநாதர் கடவுள் வணக்கப்பாடல் ஒன்றைப் பாடித் தந்திருந்தாலும், தான் எடுத்துக்கொண்ட காவியம் இடையூறு இல்லாமல் நல்லவிதமாக முடிய வேண்டும் என எண்ணி, தானும் ‘மூவா முதலா’ எனத்தொடங்கும் ஒரு பாடலைப்பாடி, தமிழ் காப்பியம் பாடத் தொடங்கினார்.

திருத்தக்க தேவரின் கடவுள் வாழ்த்துப்பாடலைப் பார்த்தார் குருநாதர்; சீடன் எழுதிய பாடல், தன் பாடலை விடப் பொருளாழமும் சொல்லழகும் கொண்டதாக இருந்ததைக்கண்டு மகிழ்ந்தார் குருநாதர். மனம் விட்டுப் பாராட்டினார்.‘‘திருத்தக்க தேவா! உன் பாடல் அற்புதம்! அதிஅற்புதம்! உன் பாடலையே முதல் பாடலாகவும், என் பாடலை அதற்கு அடுத்ததாகவும் வைத்து, இந்த நூலைப்பாடு!’’ என்றார் குருநாதர். அதன்படியே அமைத்து, மேற்கொண்டு காவியத்தைத் தொடர்ந்து பாடி, எட்டே நாட்களில் ‘சிந்தாமணி’ எனும் காப்பியத்தைப் பாடி முடித்தார் திருத்தக்க தேவர். ஆம்! எட்டு நாட்களில் பாடி முடிக்கப்பட்ட காப்பியம்தான் சிந்தாமணி. விரைந்து கவி பாடும் சீடனின் ஆற்றலைக்கண்ட குருநாதர் வியந்தார்.

‘‘அப்பா! திருத்தக்க தேவா! இந்நூலை அதிவிரைவாக, மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முன்பாக அரங்கேற்றம் செய்!’’ என்று ஆணையிட்டார் குருநாதர். அதன்படியே திருத்தக்க தேவர் மதுரை சென்று, அப்போது அங்கிருந்த தமிழ்ச்சங்கத்தில், கற்றோரும் மற்றோரும் களிக்கும் படி, தான் எழுதிய ‘சிந்தாமணி’ எனும் காப்பியத்தை அரங்கேற்றினார்.மதுரைப் புலவர்கள் சிலர், சிந்தாமணி எனும் அந்த நூல் இன்பச்சுவையை மிகவும் அழகாகவும், உள்ளது உள்ளபடியும் விவரித்திருப்பதைக் கண்டு வியந்தார்கள்.

இருந்தாலும், அப்புலவர்கள் மனதில், ஓர் எண்ணம் தோன்றியது. அந்த எண்ணம் தவறாக இருந்தாலும், அதைச் சொல்லவும் செய்தார்கள். “ஒருவேளை, திருத்தக்கதேவர் தம் வாழ்க்கையில் காமச்சுவையை நன்றாக அனுபவித்திருப்பாரோ?’’ என்றார்கள். அதைக்கேட்ட, திருத்தக்க தேவர் வருந்தினார். ‘‘நம் ஒழுக்கத்தில், அடுத்தவர் சந்தேகம் கொள்ளும்படி நேர்ந்துவிட்டதே!’’ என்று வருந்தினார். அந்த வருத்தத்தின் விளைவாகத் திருத்தக்கதேவர், ‘‘பழுக்கக் காய்ச்சிய மழுவை, உடனே கொண்டு வாருங்கள்!’’ என்றார்.

உடனே மழு கொண்டு வரப்பட்டது. அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, ‘‘நான் என் இளமை முதலே, துறவு ஒழுக்கத்தில் தவறாமல் வாழ்ந்து வந்திருப்பது உண்மையானால், பழுக்கக் காய்ச்சிய, சூடான இந்த மழு, என்னைச் சுடாமல் இருக்கட்டும்!’’ என்று சபதம் செய்தபடியே, கொதித்துக் கொண்டிருக்கும் அந்த மழுவைத் தன் கையில் பிடித்தார். அதனால், திருத்தக்க தேவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் வியந்தார்கள்.

திருத்தக்க தேவர் மீது தவறான எண்ணம் கொண்டு பேசிய புலவர்கள் பயந்தார்கள். பிழை சொன்ன அந்தப் புலவர்கள், திருத்தக்கதேவரை வணங்கி, மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். திருத்தக்கதேவரோ மிகவும் அமைதியாக, ‘‘புலவர்களே! நீங்கள் ஒரு பிழையும் செய்யவில்லை. எம் துறவொழுக்கத்தின் உண்மையை, உலகம் அறியும்படியாக உதவிதான் செய்தீர்கள்’’ என்று கூறி அவர்களை மன்னித்தார். மன்னரும், புலவர்களும் திருத்தக்கதேவரைப் புகழ்ந்து பாராட்டி, மரியாதை செய்தார்கள்.அவர்களிடம் விடைபெற்ற திருத்தக்கதேவர், தம் குருநாதரிடம் திரும்பி, மதுரையில் நடந்தவை களைச் சொல்லி, அவர் ஆசிகளைப் பெற்றார்.

சிந்தாமணியின் கதாநாயகன், சீவகன். அதனால் அதை ‘சீவகசிந்தாமணி’ என்றும் சொல்லப்படும். அற்புதமான அந்த நூலில் இருந்து ஒரு சில கருத்துக்கள். நரகத்திற்குச் செல்பவர்கள், அதாவது மிகுந்த துன்பத்தை அடைபவர்கள், யார் யார் எனப் பட்டியல் இடுகிறது சிந்தாமணி.

நட்புக்கு வஞ்சகம் செய்தவன், அடுத்தவர் மனைவியிடம் முறைதவறி நடந்தவன், காமம் தலைக்கேறிப் பெண்களின் கற்புக்குக் கேடு விளைவித்தவன், மற்றவைகளின் உடல்களைத் தின்றவன், உயர்ந்த பதவி வகித்து மக்களுக்குத் தீங்கு செய்பவன் ஆகிய எல்லோரும் குஷ்ட நோயால் அவதிப்பட்டு, நரகத்தில் விழுவார்கள்.

நட்பிடைக் குய்யம் வைத்தான்,
பிறன் மனை நலத்தைச் சார்ந்தான்,
கட்டழல் காமத்தீயில்
கன்னியைக் கலக்கினானும்
அட்டு உயிர் உடலம் தின்றான்,
அமைச்சனாய் அரசு கொண்டான்
குட்ட நோய் நரகம் தம்முன்
குளிப்பவர் இவர்கள் கண்டாய் (சிந்தாமணி)

சிந்தாமணி எனும் இக்காப்பியத்தை இன்பச்சுவை நிறைந்த நூல் என்று சொன்னாலும்கூட, தொட்ட இடம் தோறும் எந்தக் காலத்திற்கும் தேவையான அறங்களும், தத்துவங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பார்க்கலாம்!பகைவர்களை எதிர்க்கப் பலர் உதவி செய்வார்கள்; செய்வார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்! பகைவர்களை எதிர்த்துப் போராடி வெற்றிபெற வேண்டும்!

காலமெல்லாம் யார் யாருக்காகப் போராடி உழைக்கின்றோமோ, அவர்களில் ஒருவர்கூட ஆன்மப் போர்க்களத்தில், நமக்கு உதவிசெய்ய முன் வர மாட்டார்கள்; வர முடியாது. வாழ்க்கையே ஒரு போர்க்களம். அதில் வெற்றிபெற வேண்டுமானால் போராடித்தான் ஆக வேண்டும். அந்தப் போர்க்களத்தை, ‘சிந்தாமணி’ அற்புதமாக விவரிக்கிறது.

ஔிறு தேர் ஞானம்; பாய்மா இன்னுயிர் ஓம்பல்; ஓடைக்
களிறு நற்சிந்தை; காலாள் கருணையாம்; கவசம் சீலம்;

வெளிறில் வாள் விளங்கு செம்பொன் வட்ட மெய்ப்பொருள்களாக பிளிறு செய் கருமத் தெவ்வர் பெருமதில் முற்றினானே

கருத்து: மெய்ஞ்ஞானமே தேர்ப்படை; உயிரைப் பாதுகாப்பதே குதிரைப்படை; நல்ல சிந்தையே யானைப்படை; கருணை – அகிம்சையே காலாட்படை; ஒழுக்கமே கவசம்; மெய்ப் பொருள்களே வாளும் கேடயமும் ஆகும். இவற்றையே ஆயுதங்களாகக் கொண்டு, இரு வினைகளாகிய பகைவர்களை எதிர்த்துப் போரிட்டான் சீவகன்.இவ்வாறு, வாழ்க்கைத் தத்துவங்களும் அறநெறிகளும் நிறைந்த நூல், சிந்தாமணி.

The post கொதிக்கும் மழுவும் காப்பியமும் appeared first on Dinakaran.

Tags : B. N.N. Parasuraman ,
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?