×

பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல்

பார்படாஸ்: இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில் 2வது டெஸ்ட்மழையால் டிராவில் முடிந்தது. இதனால் 1-0 என இந்தியா தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. இதில் முதல்ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடக்கிறது. ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் கோஹ்லி, சுப்மன்கில், ஜடேஜா, ஹர்த்திக் பாண்டியா, சூர்யகுமார்யாதவ், சிராஜ், அக்சர்பட்டேல் என முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஆடும் லெவனில் யார் யாருக்கு இடம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இஷான்கிஷன்-சஞ்சுசாம்சன் , அக்சர் படடேல்- ஷர்துல்தாகூர் , குல்தீப் யாதவ்- சாஹல் ஆகியோர் இடையே போட்டி உள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் 70 நாட்களே உள்ளதால் இந்த தொடர் இந்தியாவுக்கு நல்ல பயிற்சி களமாக இருக்கும். மறுபுறம் 2 முறை உலக சாம்பியனான வெஸ்ட்இண்டீஸ் முதன்முறையாக உலக கோப்பைக்கு தகுதிபெற முடியாதசோகத்தில் களம் காண்கிறது. சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் எண்ணத்தில் களம் இறங்குகிறது. முன்னாள் கேப்டன்கள் பூரன், ஹோல்டருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ஷாய் ஹோப் தலைமையிலான அணியில் ஹெட்மயர் சேர்க்கப்பட்டுள்ளார். பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ்,ரோவ்மேன் பவல் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதனை டிடி போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2006ம் ஆண்டுக்கு பின் வெஸ்ட்இண்டீஸ் வென்றது இல்லை. இதற்கு பின் கடந்த 17 ஆண்டுகளில் வெஸ்ட்இண்டீசில் நடந்த 5 தொடர் உள்பட 12 ஒருநாள் தொடர்களையும் இந்தியாவே வென்றுள்ளது. இந்திய ஆடும் லெவன்: சுப்மன்கில், ரோகித்சர்மா (கே), கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், சாம்சன் (வி.கீ), ஹர்த்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல் (அ) ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், சிராஜ், உம்ரன் மாலிக். வெ.இண்டீஸ்: பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், அலிக் அத்தானாஸ், ஷாய் ஹோப்(கே,வி.கே),ஹெட்மயர், ரோவ்மேன் பவல், ஷெப்பர்ட், அல்சரி ஜோசப், கெவின் சின்க்ளேர், குடாேகேஷ்மோதி,ஓஷேன் தாமஸ்.

இதுவரை நேருக்குநேர்..
இருஅணிகளும் இதுவரை 139 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன.இதில் 70ல் இந்தியாவும், 63ல் வெஸ்ட்இண்டீசும் வென்றுள்ளன. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. 4 போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 10 போட்டிகளில் இந்தியா 9ல் வென்றுள்ளது. வெ.இண்டீசுக்கு எதிராக கோஹ்லி 42 போட்டியில், 9சதம், 11 அரைசதத்துடன் 2261ரன் எடுத்து டாப்பில் உள்ளார். பவுலிங்கில் வால்ஸ் இந்தியாவுடன் 38 போட்டியில் 44 , கபில்தேவ், வெ.இண்டீசுக்கு எதிராக 42 போட்டியில் 43 விக்கெட் எடுத்து முதல் 2 இடத்தில் உள்ளனர்.

பிரிட்ஜ்டவுனில் 21 ஆண்டுக்குபின் மோதல்…
பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் இந்தியா இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் (வெ.இண்டீசுக்கு எதிராக) ஆடி 1ல் வெற்றி, 2ல் தோல்வி கண்டுள்ளது. 2002ம் ஆண்டு கடைசியாக இங்கு ஒருநாள் போட்டியில் ஆடிய இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 21 ஆண்டுகளுக்குபின் நாளை ஒருநாள் போட்டியில் இங்கு இந்தியா ஆட உள்ளது. வெஸ்ட்இண்டீஸ் இங்கு 39 போட்டிகளில் ஆடி 17ல் வெற்றி,22ல் தோல்வி அடைந்துள்ளது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து 2019ல் 364/4 ரன் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்னாகும். 1997ல் 199/7 ரன் எடுத்ததுதான் இந்தியாவின் பெஸ்ட் ஸ்கோராக உள்ளது.

விமானம் தாமதம்: இந்திய அணி அதிருப்தி
டிரினிடாட்டில் 2வது டெஸ்ட் முடிந்து முதல் ஒருநாள்போட்டிக்காக இந்திய வீரர்கள் பார்படாஸ் சென்றனர். ஆனால் இதற்காக விமான நிலையத்தில 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததால் இந்திய அணி அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. விமானம் இரவு 11 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் அதிகாலை 3 மணிக்கு தான் புறப்பட்டது, இதனால் வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு பார்படாஸ் வந்தடைந்தனர்.

The post பிரிட்ஜ் டவுன் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் நாளை மோதல் appeared first on Dinakaran.

Tags : India ,West Indies ,Bridgetown Stadium ,Barbados ,Bridgetown ,Dinakaran ,
× RELATED பரபரப்பான ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசை...