×

வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க தெற்கு பிச்சாவரம் பாலத்தை சீரமைக்க வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் செல்லும் பகுதியில் உப்பனாற்று பகுதியில் உள்ள பாலத்தை சீரமைத்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள தெற்கு பிச்சாவரம் செல்லும் சாலையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பாலம் உள்ளது. இதன் வழியாக தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், சேத்துக்கொள்ளை, நடுபாளையம், இளந்தரமேடு, காடுவெட்டி, கீழப்பிறம்பை, சின்ன காரமேடு, பெரிய காரமேடு, தா.சோ.பேட்டை, கொடியம்பாளையம், உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் கொடியம்பாளையம் தா.சோ.பேட்டை பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்து வெளியிடங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

அதேபோல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி மற்றும் மணிலா, கேழ்வரகு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர். மேலும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார் ஊழியர்கள், வியாபாரிகள், கூலி தொழிலாளர்களும் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உப்பனாற்றில் உள்ள பாலம் மிகவும் சேதம் அடைந்து தடுப்பு கட்டைகள் ஒரு சில இடங்களில் உடைந்து உள்ளது. மேலும் பல இடங்களில் கரைகள் பெயர்ந்து உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. இந்த உப்பனாற்றிலும் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து இவற்றை முழுமையாக மூடி தண்ணீர் தடை இன்றி செல்ல முடியாத நிலையில் படர்ந்து உள்ளது. மேலும் இந்தப் பாலத்தில் கைப்பிடி கட்டைகள் உடைந்து உள்ளது. எனவே உடனடியாக இந்த பாலத்தை சீரமைத்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படாமல் இருக்க தெற்கு பிச்சாவரம் பாலத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : South Pichavaram bridge ,Chidambaram ,Uppanatu ,South Bichavaram bridge ,Dinakaran ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!