×

கடல் மட்டத்திலிருந்து 2,200 அடி உயரத்தில் உள்ள அணைக்கட்டு பீஞ்சமந்தை மலைகிராமத்தில் சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்கு பின்னர் சாலை வசதி கண்ட மலைவாழ் மக்கள்

*கர்ப்பிணிகள், நோயாளிகள் பெரும் நிம்மதி

*டோலிகட்டி தூக்கிச்சென்ற நிலைக்கு முற்றுப்புள்ளி

ஒடுகத்தூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒடுகத்தூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது பீஞ்சமந்தை மலை கிராமம். இது வேலூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், கடல் மட்டத்திலிருந்து 2,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வேலூர், அணைக்கட்டு, முத்துக்குமரன் மலை வழியாக சென்று பீஞ்சமந்தை மலை கிராமத்தை எளிதில் சென்றடைய முடியும்.

பீஞ்சமந்தை மலை கிராமமானது சுமார் 1781.28 பரப்பளவில் பறந்து விரிந்து எழில்மிகுந்து காட்சியளிக்கிறது. புளியமரத்தூர், நாயக்கனூர், தொங்குமலை, எள்ளுப்பாறை, தேக்குமரத்தூர், சின்ன எட்டுப்பட்டி, குடிகம், கட்டியாம்பட்டு உள்ளிட்ட 48 கிராமங்களை கொண்டுள்ளது. இந்த மலைப்பகுதியில் சுமார் 7,140 பேர் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

பீஞ்சமந்தை மலை கிராமத்தை பொறுத்த வரைக்கும் தினை, சாமை, கேழ்வரகு, தேன், பலா, புளி மற்றும் தற்போதைய சூழலில் தோட்ட கலைத்துறை சார்பாக முட்டைக்கோஸ், மிளகு உள்ளிட்டவைகள் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு உள்ள மலைப் பகுதிகளின் அமைப்பு மற்றும் மாசற்ற சுற்றுச்சூழல் காண்போர் கண்களை அகல விரிப்பதோடு அனைவரின் மனதையும் ஆட்கொள்ளும் வகையில் ரம்மியமாக அமைந்துள்ளது.

இத்தகைய சூழலில் வெள்ளைக்காரன் ஆட்சி காலம் முதல் பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். பிரசவநேரத்தில் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல சாலை வசதி இல்லாமல் பலியான கர்ப்பிணிகள், பாம்புக்கடிகளுக்கும், நோய் பாதிப்புகளுக்கும் பறிபோன உயிர்கள் அதிகம்.

சாலை வசதி கிடைக்குமா? என்ற கனவுகளை சுமந்து நின்ற மலைவாழ் மக்களின் துயர் துடைக்கும் வகையில், சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்கு பின்னர் அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தீவிர முயற்சியால் மலைவாழ் மக்கள் சாலை வசதிகளை கண்டுள்ளனர். இதனால் அவர்களின் நூற்றாண்டு கனவுகள் திமுக ஆட்சியில் நிறைவேறியுள்ளது.

இதற்காக அணைக்கட்டு அடுத்த முத்துக்குமரன் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 6.55 கி.மீ தூரத்திற்கு ₹5.11 கோடி செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதன் மூலம் கர்ப்பிணிகள், நோயாளிகளை டோலிகட்டி தூக்கி சென்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டு கனவுகள் நிறைவேறியதால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மனம் மகிழ்ந்து அரசுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

கோடை விழா நடத்த உகந்த இடம் ஏன்?

சுற்றுலா பயணிகளும், இயற்கை ஆர்வலர்களும் பெரிதும் எதிர்பார்ப்பது முறையான சாலை வசதி தான். அந்த வகையில் தற்போது பீஞ்சமந்தை மலை கிராமத்திற்கு தரமான தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல கடல் மட்டத்திலிருந்து 2200 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் இங்கு குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியசும் வெயில் நிலவுகிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. பீஞ்சமந்தை மலை கிராமம் 1781.28 ஹெக்டேரில் அமைந்துள்ளதால் வரும் காலங்களில் சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள உகந்த இடமாக உள்ளது.

அதேபோல் வேலூர் மாநகரின் மையப் பகுதியில் இருந்தும் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்தும் எளிதாகவும், விரைவாகவும் கடக்கும் தொலைவில் அமைந்துள்ளது பீஞ்சமந்தை மலை கிராமம். சுற்றுலா தலங்களுக்கே உரிய தனித்துவமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அதேபோல மக்கள் மனங்களை கவரும் மூங்கில் காடுகள் அழகுடன் வரவேற்கும். புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளவும், செல்லும் வழியில் இருந்து வேலூரின் அழகை உயரத்தில் இருந்து ரசிக்கும் வகையில் பீஞ்ச மந்தை உள்ளது. மலை கிராமத்தில் விளையும் பொருட்களை மதிப்பு கூட்டு செய்வதன் மூலம் கூடுதல் வருவாயை அங்குள்ள மக்களால் பெற முடியும்.

வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோடைவிழாவுக்கு கோரிக்கை

இதுகுறித்து மலைவாழ்மக்கள் கூறுகையில், ‘மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், தற்போது வரைக்கும் முறையான தொழில் வாய்ப்புகள் இல்லாத சூழல் காரணமாக மலையில் வசிக்கும் மக்கள் குடும்பங்களோடு கேரளா, மைசூர், குடகுமலை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தேயிலை தோட்ட வேலை மற்றும் ஏலக்காய் தோட்ட வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பீஞ்சமந்தையில் ஆண்டுக்கு ஒரு முறை கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார் உறுதி அளித்துள்ளார். கோடை விழா நடத்துவதால் தங்கள் பகுதி வளர்ச்சி அடைவதோடு, தங்களின் வாழ்வாதாரமும் வளர்ச்சி அடையும். எனவே கோடை விழா நடத்த வேண்டும், என்றனர்.

முழுக்க, முழுக்க முதல்வர் தான் காரணம் எம்எல்ஏ நந்தகுமார்

இதுகுறித்து அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கூறுகையில், ‘நான் சிறுவயது முதலே மலை வாழ்மக்கள் சாலை வசதியின்றி டோலிகட்டி தூக்கி சென்று இறந்த சம்பவங்களை பார்த்துள்ளேன். நான் சட்டமன்ற உறுப்பினர் ஆன பின்னர், சாலை வசதி அமைக்க சட்டமன்றத்தில் பல நாள் கோரிக்கை வைத்தேன். 2017ம் ஆண்டு அப்போது அமைச்சராக இருந்த வீரமணி அரசு விழாவில், ஒரு ஆண்டில் சாலை அமைப்பேன் என்றார். அரசில் ஆட்சி ெசய்கிறவர் நீங்கள் கட்டாயம் சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறிய பின்னரும், கிடப்பில் போட்டு விட்டனர். அதன்பின்னர், ஒரு கர்ப்பிணி பெண் டோலிகட்டி தூக்கிச்செல்லும் போது வழியில் இறந்துவிட்டார்.

அதன்பின்னர் நான் தொடர்ந்து சாலை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டேன். 2019 இடைத்தேர்தலில் திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பணிக்கு வரும்போது, அவரும் வாக்குறுதி கொடுத்தார். நான் தான் வனத்துறை அமைச்சர், சாலை அமைக்கிறேன் என்றார். பலமுறை மக்கள் சாலை வசதி கேட்டு கோரிக்கை வைத்து யாரும் அமைக்க வில்லை. அதன்பின்னர் 2021 தேர்தலில் வெற்றி பெற்றபோது மக்களை சந்தித்து கண்டிப்பாக உங்களுக்கு சாலை வசதி அமைப்பேன் என்று கூறினேன். பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மு.க.ஸ்டாலின் முதல்வரானார். உடனடியாக, சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து வனத்துறைக்கு அதற்கான நிலத்தை கொடுத்து, தரமான சாலை அமைத்து கொடுக்கப்பட்டது.

அமைச்சர்கள் இதனை திறந்து வைத்தனர். முழுக்க, முழுக்க முதல்வர் தான் இதற்கு காரணம். மேலும் அல்லேரி, ஜார்தான்கொல்லை போன்ற மலைக்கிராமங்களுக்கும் சாலை வசதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைகிராமங்கள் அனைத்திற்கும் சாலைவசதி ஏற்படுத்தப்படும். பீஞ்சமந்தையில் கோடை விழா நடத்த கேட்டுள்ளேன். கோடை விழா அரசு சார்பில் கட்டாயம் நடக்கும்.

அதன்பின்னர் தான் வளர்ச்சி இருக்கும். மேலும் பஸ் வசதி, டெலிபோன் டவர் போன்றவையும் அமைக்க முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்ைக எடுக்கப்படும். அல்லேரி மலைக்கு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தார் சாலை திறந்து வைக்கும் விழாவில் சொன்னது போல் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் கோடை விழா நடத்த என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளும், பொதுமக்களுக்காக நான் கண்டிப்பாக எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post கடல் மட்டத்திலிருந்து 2,200 அடி உயரத்தில் உள்ள அணைக்கட்டு பீஞ்சமந்தை மலைகிராமத்தில் சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்கு பின்னர் சாலை வசதி கண்ட மலைவாழ் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore District Dam ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...