×

பல்வேறு மாவட்டங்களில் 28 வழக்குகள் பதிவு ஊர் ஊராக பஸ்சில் சென்று கைவரிசை காட்டிய தர்மபுரி கில்லாடி குடும்பத்தினர்

*102 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் சிக்கினர்

சிவகிரி : தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் எஸ்.டி.நகர் புதுமனை 3ம் தெருவில் வசிப்பவர் மணிவண்ணன். இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி அதிகாலை மணிவண்ணன் தனது குடும்பத்தினருடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றிருந்தார். பின்னர் அவர்கள் 19ம் தேதி இரவு 10 மணியளவில் வீடு திரும்பினர். அப்போது வீட்டு காம்பவுண்ட் கேட்டை திறந்து பார்த்தபோது வீட்டின் மெயின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 102 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து மணிவண்ணன் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன், புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அசோக்குமார், இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவநல்லூர் சண்முகசுந்தரம், சிவகிரி சண்முகலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் புதுமனை தெருவில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போது, சம்பவத்தன்று சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது.

தனிப்படையினரின் தீவிர விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் நடராஜன் (எ) நிக்கல்சன் (50), அவரது மனைவி லலிதா (45), மகன் நவீன்குமார் (27), மேலும் ஒருவர் உள்ளிட்ட 4 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படையினர் பதுங்கி இருந்த தம்பதியினர் நடராஜன் என்ற நிக்கல்சன், லலிதா மற்றும் அவர்களது மகன் நவீன்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

இந்தக்கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல டிக்கெட் எடுத்து விட்டு இடையில் ஏதாவது ஒரு ஊரில் இறங்கி அங்கு பூட்டப்பட்டிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு அந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று நகைகளை கொள்ளை அடிப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த 18ம் தேதி இவர்கள் 3 பேர் மற்றும் தலைமறைவான நபரும் சேர்ந்து விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து தென்காசிக்கு டிக்கெட் எடுத்துள்ளனர். ஆனால் இடையில் வாசுவேநல்லூர் புறநகர் பகுதியில் இறங்கி நடந்து வந்து பூட்டிக் கிடந்த மணிவண்ணன் வீட்டை நோட்டமிட்டுள்ளனர். அங்கு ஆட்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த 4 பேரும் வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இதுபோல் இவர்கள் பல்வேறு ஊர்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் 3 பேர் மீதும் பல்வேறு மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 28 திருட்டு வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட 3 பேரும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இதில் தொடர்புடைய மற்றொருவரை பிடிக்க எஸ்ஐ வேல்முருகன் தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

The post பல்வேறு மாவட்டங்களில் 28 வழக்குகள் பதிவு ஊர் ஊராக பஸ்சில் சென்று கைவரிசை காட்டிய தர்மபுரி கில்லாடி குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri Killadi ,Sivagiri ,Thenkasi District ,Vasudevanallur SD Nagar Pudumanai 3rd Street ,Dinakaran ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்