×

திருப்பதி அடுத்த ஸ்ரீசிட்டியில் ₹1,600 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அடிக்கல்

*காணொலியில் முதல்வர் தொடங்கி வைத்தார்

திருப்பதி : திருப்பதி அடுத்த ஸ்ரீசிட்டியில் ₹1,600 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு காணொலியில் முதல்வர் ஜெகன்மோகன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
திருப்பதி மாவட்டம், சத்தியவேடு அடுத்த ஸ்ரீசிட்டியில் ₹1,600 கோடி மதிப்பில் சர்வதேச உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனை முதல்வர் ஜெகன்மோகன் குண்டூரில் உள்ள முகாம் அலுவலகத்திலிருந்து காணொலியில் நேற்று தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து கலெக்டர் வெங்கடரமணா, எம்எல்ஏ ஆதிமூலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது, முதல்வர் ஜெகன்மோகன் பேசுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் சர்வதேச சாக்லேட் நிறுவனம் ₹1,600 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்’. தொடர்ந்து, கலெக்டர் வெங்கடரமணா கூறுகையில், ‘திருப்பதி மாவட்டத்தில் தொழில்துறை நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளித்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று (நேற்று) தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் 45 நாட்களில் தனது முதற்கட்ட உற்பத்தியை தொடங்கும். இதனால், ஆயிரம் பேருக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மாவட்ட நிர்வாகம் தொழிற்சாலைக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தரும்’ என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் அலுவலர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post திருப்பதி அடுத்த ஸ்ரீசிட்டியில் ₹1,600 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Sricity ,Chief Minister ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்