×

மதிப்பீடு தயாரிக்க ₹2.50 கோடி செலவிடப்படும் கோதையாறு பாசன திட்டம் முழு சீரமைப்பு

* 1906ல் இருந்த நிலைமை மீட்டெடுக்கப்படும்

* விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கோதையாறு பாசன திட்டம் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீடு தயாரிக்க ரூ.2.50 கோடி செலவிடப்பட்டு கால்வாய்கள் 1906ல் இருந்த நிலை உருவாக்கப்படும் என்று நாகர்கோவிலில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஜோதிபாசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகரன், தோட்டக்கலை உதவி இயக்குனர் ஷீலா ஜாண், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை ) கீதா, வேளாண்மை இணை இயக்குநர் வாணி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் பாரிவேந்தன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வின்ஸ் ஆன்றோ, தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, புலவர் செல்லப்பா, தேவதாஸ், விஜி, ஹென்றி, அருள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஸ்ரீதர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். குமரி மாவட்டத்தில் கால்வாய்கள் தூர் வாருதல் தொடர்பாக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பினர்.புலவர் செல்லப்பா: பட்டணங்காலில் தண்ணீர் விநியோகம் ஏன் செய்யப்படவில்லை.

ராஜ்குமார்: பட்டணங்கால் தூர்வாரப்பட்டு கால்வாய் கரை பகுதியில் தூர்வாரிய மண் கரை பகுதியில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று பெய்த மழையில் கழிவு மண் அனைத்தும் மீண்டும் கால்வாயில் இழுத்து செல்லப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை அதிகாரி: தூர்வாரிய வண்டல் மண் அள்ளி வைக்க விவசாயிகள் அதனை எடுத்து செல்கின்றனர். குமரி மாவட்டத்தில் ஆக்ரமிப்புகள் கால்வாய்களில் பாரபட்சம் இன்றி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டணங்காலில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதால் கால்வாயில் தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை.

புலவர் செல்லப்பா: இரணியல் கால்வாயில் நெய்யூர் அருகே ரயில்வே பால பணிகள் நடைபெறுவதால் பணிகள் முடியும் வரை தற்காலிக பாலம் அமைக்க வேண்டும், இருந்த தற்காலிக பாலம் அகற்றப்பட்டுள்ளது. இதனால் பல கிமீ தூரம் பொதுமக்கள் சுற்ற வேண்டியுள்ளது. தண்ணீர் செல்லும் பாலம் தாழ்வாக கட்டப்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்குகிறது.கலெக்டர்: இது தொடர்பாக அதிகாரிகள் கூட்டத்தில் பேசப்பட்டு விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெரியநாடார்: பறக்கை நேரடி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தை மேம்படுத்தி நெல் நனையாமல் இருக்க கூரை அமைக்க வேண்டும்.கலெக்டர்: இடத்தை நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஹோமர்லால்: குமரி மாவட்டத்தில் கால்வாய்கள், குளங்கள் தூர்வாருவது முறையாக நடைபெற வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரி: கோதையாறு பாசன திட்டம் முழுவதும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எல்லா ஆக்ரமிப்புகளும் பாரபட்சமின்றி அகற்றப்படும். பொதுப்பணித்துறை இடங்கள் அனைத்தும் காப்பாற்றப்படும். அப்போது யாரும் கோரிக்கையுடன் வரக்கூடாது. ஒட்டுமொத்த நீராதார அமைப்புகளும் நவீன முறையில் அளவீடு செய்யப்படும்.

1906ல் இருந்தது போன்று கால்வாய்கள் மாற்றப்படும். மதிப்பீடுகள் தயாரிக்க ₹2.50 கோடி செலவிடப்படும். கால்வாய்கள் புனரமைப்புக்கு பிறகு புதிய சிஸ்டம் ஆரம்பிக்கப்படும். மாவட்டத்தில் 1500 கிமீ தூரத்திற்கு கால்வாய்கள் உள்ளது, இதில் உள்ள ஆக்ரமிப்புகள் அனைத்தும் அளவீடு செய்யப்படும். 2244 குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் அளவீடு செய்யப்படும்.

கனிம வளத்துறை அதிகாரி: குமரி மாவட்டத்தில் 1092 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து அரசிதழில் வெளியிடப்பட்டது. இதில் தூர்வாருவதற்கு அனுமதி பெற்றும் விவசாயிகள் பலர் வண்டல் மண் எடுக்கவில்லை. பல குளங்களிலும் மழை பெய்தும், கால்வாய்களில் தண்ணீர் வாயிலாக குளங்கள் நிரம்பியுள்ளதால் வண்டல் மண் எடுக்க அனுமதி இல்லை. அடுத்த முறை விடுபட்ட குளங்கள் பட்டியலிடப்படும்.

முருகேசபிள்ளை: என்.பி சானலில் நெடுஞ்சாலைத்துறை பக்கச் சுவர் கட்டி சானலை சுருக்கிவிட்டனர். இது தொடர்பாக பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
கலெக்டர்: இது தொடர்பாக மாவட்ட உயர்மட்ட குழுவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தாணுபிள்ளை: தேரூர் குளத்தில் வனத்துறை செயல்பாடுகள் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேச உயர் அதிகாரிகள் ஏன் வரவில்லை?
அதிகாரிகள்: அடுத்த கூட்டத்தில் இது தொடர்பாக தக்க பதில் வழங்கப்படும். மேலும் கருங்கல் பட்டணங்கால் பிரிவு சானலில் இருந்து வெட்டி கடத்தப்பட்ட மரங்களுக்கு அபராதம் வசூலிக்க ஆர்டிஓ பிறப்பித்த உத்தரவு என்ன ஆனது? பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது இல்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். முன்னதாக தோட்டக்கலை மலை பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு ஐந்து விதமான ஆடிப்பட்ட காய்கறி விதைகளை கலெக்டர் வழங்கினார். இவை தோட்டக்கலைத்துறை அலுவலகங்களில் தலா ₹10க்கு விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பிடிஓ மீது நடவடிக்கை?

வேம்பனூர் வருவாய் கிராமம் பிரையார்குளம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது, ஆனால் யூனியன் குளம் என வகைப்படுத்தப்பட்டு 20 அடி ஆழத்திற்கு குளம் தூர்வாரப்பட்டுள்ளது. குளத்தில் மடைகள் உடைபட்டுள்ளதால், தண்ணீர் நிரப்பாமல் விவசாயம் தடைபட்டுள்ளது.

இது தொடர்பாக பி.டி.ஒ மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று விஜி என்பவர் கேள்வி எழுப்பினார்.கனிமவளத்துறை அதிகாரி பதிலில் இது தொடர்பாக குற்றவியல் மற்றும் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

கொப்பரை கிலோ ₹108.60க்கு கொள்முதல்

தேங்காய் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் நலன் கருதி தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என தேவதாஸ் என்பவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதலளித்த விற்பனை குழு செயலாளர்: தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் என்பது ஒன்றிய மற்றும் மாநில அரசின் கொள்கை முடிவு சார்ந்தது ஆகும். தென்னை விவசாயிகள் ஒன்றிய அரசின் ஆதார விலை திட்டத்தின் கீழ் வடசேரி மற்றும் திங்கள்சந்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படுவதால் தேங்காய் விளை பொருட்களை அரவை கொப்பரையாக மாற்றி கிலோவுக்கு ₹108.60 என்ற விலையில் விற்பனை செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்தார்.

The post மதிப்பீடு தயாரிக்க ₹2.50 கோடி செலவிடப்படும் கோதையாறு பாசன திட்டம் முழு சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kotaiyar ,Kumari District ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...