×

திருச்சுழி அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் கண்டுபிடிப்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே கல்லூரணி காட்டு பகுதியில் 8ம் நூற்றாண்டு சண்டிகேஸ்வரர் சிறபத்தை தொல்லியல் கள ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருச்சுழி அருகேயுள்ள கல்லூரணி காட்டு பகுதியில் மிகப்பழமையான சிற்பம் இருப்பதாக, அதே ஊரை சேர்ந்த செல்வகனேஷ், வீரக்குமார், வெயிலப்பன் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில், அருப்புக்கோட்டை எஸ்பிகே மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ரவிச்சந்திரன், பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று தொல்லியல் களஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் நேரில் சென்று களஆய்வு செய்தனர். அப்போது அங்கு 8ம் நூற்றாண்டு பழமையான சண்டிகேஸ்வரர் சிற்பத்தை கண்டுபிடித்தனர்.பின்னர் அவர்கள் கூறியதாவது:

சிவனின் சொத்துக்களை காப்பவர் சண்டிகேஸ்வரர் என சொல்லப்படுகிறது. கல்லூரணி காட்டு பகுதியில் நாங்கள் பார்த்த சிற்பம் சண்டிகேஸ்வரர் சிற்பமாகும். இவருக்கு சண்டேச நாயனார் என்ற பெயரும் உண்டு. இவரது இயற்பெயர் விசாரசர்மன். இவர் சிறுவயது முதல் சிவபெருமான் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். இவர் மாடுகள் மேய்த்து வந்தார். அப்போது மணலால் லிங்கம் செய்து பூஜித்து வந்தார்.

இந்த லிங்கத்தின் மீது மாடுகள் தானாக பால் சொரிந்து தினசரி அபிஷேகம் செய்தன. இதுகுறித்து அறிந்த மாடுகளின் உரிமையாளர்கள் விசாரசர்மனின் தந்தை எச்சதத்தனிடம் புகார் தெறிவித்தனர். இதை காண விரும்பிய தந்தை, மகன் மாடுகள் மேய்க்கும் பகுதிக்கு சென்று மறைந்திருந்து கண்காணித்தார். அங்கு மணல் லிங்கத்தின் முன் விசாரசர்மன் ஆழ்ந்த தியானத்தில் இருக்க, மாடுகள் தானாக மணல் லிங்கத்தின் மீது பால் சொரிந்து அபிஷேகம் செய்தன. இதனால், ஆத்திரம் அடைந்த எச்சதத்தன் மணல் லிங்கத்தை தனது காலால் உதைத்தார்.

தவம் களைந்து எழுந்த விசாரசர்மன் தனது தந்தையின் கால்களை குச்சியால் தாக்கினார். அந்த குச்சி கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை பலமாக தாக்கியது. அப்போது நேரில் தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி, அவரது தந்தையின் கால்களை சீராக்கி, விசாரசர்மனை தனது சொத்துக்களான கணங்கள் அனைத்தையும் காவல் காத்து வருமாறு அருள்புரிந்தார். அன்று முதல் சிவனின் சொத்துக்களை காத்து வருகிறார் சண்டிகேஸ்வரர்.

சுகாசன கோலம்:இங்கு இருக்கும் சண்டிகேஸ்வரர் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் சுகாசன கோலத்தில் அமர்ந்து அழகாய் காட்சி தருகிறார். தலையில் அழகான ஜடாபாரம், காதில் பத்ரகுண்டலம், கழுத்தில் அணிகலன்கள், முப்புரி நூல், இடுப்பில் உதிர பந்தத்துடன் காட்சி தருகிறார். தனது வலது காலை மடக்கி, இடது காலை கீழே தொங்கவிட்டு சுகாசன கோலத்தில் அமர்ந்திருக்கிறார். இடது கையை தனது இடது தொடை மீது ஊரு ஹஸ்தத்தில் வைத்திருக்கிறார்.

ஊரு என்பது தொடையை குறிப்பதாகும். வலது கையில் தனது ஆயுதமான மழுவுடன் காட்சி தருகிறார். பொதுவாக சுகாசனம் என்பது இடது காலை மடக்கி வலது காலை தொங்க விட்டு காட்சி தருவது. ஆனால், முற்கால பாண்டியர் சிற்பங்கள் அனைத்தும் வலது காலை மடக்கி, இடது காலை தொங்க விட்டபடி காட்சி தருவது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இதே சுகாசன கோலத்தில் சிற்பங்கள் தொடர்ந்து கிடைத்து வருவது முற்கால பாண்டியர் கட்டிய கோயில்கள் அதிகமாக இருந்து அழிந்து போனதை நமக்கு உணர்த்துகிறது.

இங்கு கண்மாய் கரையில் ஒரு பழமையான சிவலிங்கத்தை வைத்து புதிய கோயில் ஒன்றை கட்டியுள்ளனர். இதை வைத்து பார்க்கும் போது இவ்வூரில் பழமையான சிவன் கோயில் இருந்து அழிந்திருக்கலாம். இன்று நாங்கள் கண்டுபிடித்திருக்கும் சண்டிகேஸ்வரர் சிற்பமானது அந்த கோயிலை சேர்ந்ததாக இருக்கலாம். இந்த சிற்பத்தின் காலம் 8ம் நூற்றாண்டு ஆகும். இதை காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இவ்வாறு கூறினர்.

The post திருச்சுழி அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிற்பம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chandikeswarar ,College Wild ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது