×

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 38% குறைப்பு: மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வ பதில்

டெல்லி: 2023-24 நிதியாண்டில் சிறுபான்மை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை ஒன்றிய அரசு 38% அளவு குறைத்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு முந்தைய ஆண்டை விட 38% குறைத்துள்ளது குறித்து சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சர் விளக்கம் தரவேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்.பி. மிமி சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கான ஒன்றிய அரசின் திட்டங்களையும், செலவினங்களையும் பட்டியலிட்டுள்ளார். 2022-23 நிதியாண்டில் சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் திட்டங்களுக்கு ரூ.5,020 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2023-24 நிதியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நிதி ஒதுக்கீடு ரூ.3,097 கோடியாக குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். சிறுபான்மை அமைச்சகத்தின் முக்கிய திட்டங்களான கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பிஎம்ஜிவிகே எனப்படும் பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்திற்கு மட்டும் அமைச்சகத்தின் பட்ஜெட்டில் இருந்து கிட்டத்தட்ட 80% அளவுக்கு செலவு செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால் 2022-23 நிதியாண்டில் இருந்து சிறுபான்மை மாணவர்களுக்கான மெளலானா ஆசாத், பதோ பர்தேஷ், நயா சவேரா, நவி உதான் ஆகிய திட்டங்களை நிறுத்த அரசாங்கம் முடிவு எடுத்து இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் சிறுபான்மையினர் கல்வி திட்டங்களுக்கு 2022-23 நிதியாண்டில் ரூ.2,428 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் நடப்பு ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1,542 கோடியாக குறைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் ஸ்மிருதி தெரிவித்துள்ளார்.

The post சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடு 38% குறைப்பு: மக்களவையில் அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துபூர்வ பதில் appeared first on Dinakaran.

Tags : Minister Smriti Irani ,Lok Sabha ,Delhi ,Union Government ,Ministry of Minorities ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் ஒப்புகைச்...