×

மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

*அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்

நாமகிரிப்பேட்டை : நாமக்கல் மாவட்டத்தில் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் பணியை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, கடந்த இருவாரத்துக்கு முன்பு, சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதுமாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, அமைச்சர்கள் இலவச சைக்கிள்களை வழங்கி வருகிறார்கள். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இந்தாண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. ராசிபுரம் தாலுகா மங்களபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்ற விழாவில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டு, மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, 3 பள்ளிகளை சேர்ந்த 372 மாணவ, மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து பேசினார். விழாவில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி, பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். குறிப்பாக பள்ளி கல்வித்துறையில் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் புதிய புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

மாணவ, மாணவிகள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே சென்று தன்னார்வலர்களின் பங்கேற்புடன் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை வழங்க ₹200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தைத் துவக்கி வைத்தார். அதேபோன்று மாணவ, மாணவிகளின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு ”எண்ணும் எழுத்தும் திட்டம்”, உயர்கல்வி பயிலுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக ”நான் முதல்வன் திட்டம்”, ”கல்லூரி கனவு” என மாணவ, மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி பயில புதுமை பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கி வருகிறார்கள். அறிவு புரட்சியை ஏற்படுத்தும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில், பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகின்றார். மாணவ, மாணவிகளை உளவியல் ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

குறிப்பாக அதிக அளவில் மங்களபுரம் மாணவ, மாணவிகள் மாநில, மாவட்ட அளவில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர். மாணவ, மாணவிகள் இதுபோன்ற பல்வேறு திட்டங்களை நல்லமுறையில் பயன்படுத்தி, நன்றாக கல்வி பயின்று சமூகத்தில் நல்ல நிலையை அடையவேண்டும். இவ்வாறு அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் (பொ) குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் கௌசல்யா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ஸ்ரீகலா, அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொகுதி வாரியாக சைக்கிள் பெறும் மாணவர்கள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 103 அரசு பள்ளிகளை சேர்ந்த 4,199 மாணவர்கள், 5,352 மாணவிகள் என மொத்தம் 9,551 மாணவ, மாணவியருக்கு இந்தாண்டு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. தொகுதி வாரியாக இலவச சைக்கிள் பெறும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை, நாமக்கல் – 1,235, பரமத்திவேலூர் – 1,425, ராசிபுரம் – 1,866, சேந்தமங்கலம் – 2,134, குமாரபாளையம் -1,357, திருச்செங்கோடு – 1,494 பேருக்கு இலவச சைக்கிகள் வழங்கப்பட உள்ளது.

The post மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் 9,551 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் appeared first on Dinakaran.

Tags : Minister ,Madivendan ,Namakal district ,Dinakaran ,
× RELATED நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை...