×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது

விழுப்புரம், ஜூலை 26: விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்ட அதிகாரிகளுடன் ஆதிதிராவிடர் நலத்துறை திட்ட செயலாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான், கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். அரசு செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், ஆட்சியர் பழனி, ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நலன் கருதியும், வாழ்வாதாரம் மேம்படவும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

விலையில்லா தையல் இயந்திரம், சலவைப்பெட்டி, தொகுப்பு வீடுகள், கறவை மாடுகள், தாட்கோ மூலம் தொழில் துவங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடனுதவிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்துக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ், தென்னமாதேவி ஊராட்சிக்கு ரூ.10,00,000 மதிப்பில் பரிசுத்தொகையும், 13 பயனாளிகளுக்கு ரூ.90,870 மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரமும், 4 பயனாளிகளுக்கு ரூ.22,208 மதிப்பில் விலையில்லா சலவைப்பெட்டியும், 76 பயனாளிகளுக்கு ரூ.26,60,000 மதிப்பில் இலவச கறவை மாடுகள் பெறும் ஆணையும், 40 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையும் உள்பட மொத்தம் 522 பயனாளிகளுக்கு ரூ.8,18,35,753 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்கும் அரசாக உள்ளது, என்றார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட அலுவலர்களுடன் துறை ரீதியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், முதல்வரின் முகவரி துறையிலிருந்து பெறப்பட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்ட விவரம், ஆதிதிராவிடர் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் விவரம் மற்றும் தேர்ச்சி விகிதம், அரசு நலத்திட்ட உதவிகள் விவரம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது, என்றார்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது appeared first on Dinakaran.

Tags : Aditravidar ,Viluppuram ,Cuddalore ,Kallakkirichi ,Aditravidar Welfare Department ,Adiravidar ,
× RELATED முகூர்த்த தினம், வார இறுதிநாளை...