×

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு ரூ.30 லட்சத்தில் பள்ளி கட்டிடம் : பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேச்சு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் வீராபுரம் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தை பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார். ஏற்கனவே, செயல்பட்ட பள்ளி கட்டிடம் பழுதடைந்ததால் அதை இடித்து தள்ளிவிட்டு தற்காலிகமாக நூலக கட்டிட மையத்தில் பள்ளி செயல்பட்டு வருவதை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி கிராம மக்களிடம் குறைகளைக் கேட்டு மனுக்களை பெற்றார். எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேசியதாவது: இங்கே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது.

இந்த பள்ளிக் கட்டிடம் அடுத்த 6 மாதத்திற்குள் ரூ..30 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கொண்டதாக புதிய கட்டிடம் கட்டித் தரப்படும். அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் அமைத்துத்தரப்படும். பள்ளியைச்சுற்றி, சுற்றுச்சுவர் அமைத்துத்தரப்படும். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களை அதிகளவில் சேர்த்து படிக்கவைத்தால், இந்த பள்ளியை நடுநிலை பள்ளியாகவும், உயர்நிலை பள்ளியாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளி கட்டிடங்களையும் தமிழக அரசு கட்டி வருகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளையும் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தி வருவதால் வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக கருதப்படுவார்கள். உங்களது பகுதியில் ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் தரமான தார் சாலைகள் விரைவில் அமைத்து தரப்பட உள்ளது. 30 ஆண்டு கால குடிநீர் பிரசனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். தண்டலம் மற்றும் வீராபுரம் கிராமங்களில் விரைவில் இடத்தை தேர்வு செய்து சுடுகாடு அமைத்து தரப்படும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டி தரப்படும். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கும் புதிய கட்டிடங்கள் மிக அருமையாகவும், பொளிவுடனும் கட்டித் தரப்படும் என பேசினார். இதனைத் தொடர்ந்து, ஈக்காடு பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆய்வு செய்தார். அப்போது, மாணவ, மாணவிகளுடன் உரையாடி ஆங்கிலத்தில் கேள்விகளைக் கேட்டார். அதற்கு தனியார் பள்ளிகளைப் போன்று ஆங்கிலத்தில் சரியான பதிலை கூறி அசத்தினர்.

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் நன்றாக உள்ளதாக ஆசிரியர்களை பாராட்டினார். பிறகு பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர் தா.எத்திராஜ், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், டி.ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.ஸ்டாலின், ஜெ.மாணிக்கம், சாமுண்டீஸ்வரி சண்முகம், கி.தரணி, எஸ்.வேலு, விமலாகுமார், மதுரைவீரன், மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் எல்.சரத்பாபு, சாந்தி தரணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பானுப்பிரியா  முருகா, லாசனா சத்யா, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் குமார், வீரராகவன் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆய்வு ரூ.30 லட்சத்தில் பள்ளி கட்டிடம் : பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Panchayat Union Primary School School Building ,Poontamalli ,MLA ,A.Krishnaswamy ,Thiruvallur ,Tiruvallur Union ,Thandalam Panchayat ,Veerapuram ,Panchayat Union Primary School ,Anganwadi Center ,
× RELATED வாலிபரை வெட்டிய வழக்கில் நீதிமன்றத்தில் இருவர் சரண்