×

விபத்தில் கம்பெனி ஊழியர் உயிரிழந்த விவகாரம் பைக்கை மறைத்து வைத்து நாடகமாடிய வாலிபர் கைது: 50 சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை

பெரம்பூர்: பெரம்பூரில் தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில், பைக்கை மறைத்து வைத்து நாடகமாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 50 சிசிடிவி காட்சிகளை வைத்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெரம்பூர் ரமணா நகர் கவுதமபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரதாபன் (41). இவர் திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் ஏஜென்டாக, சென்னையில் இருந்தபடி வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 12 வயதிலும், 5 வயதிலும் 2 மகன்கள் உள்ளனர். சிவபிரதாபன் கடந்த 18ம் தேதி இரவு பெரம்பூர் ராகவன் தெரு வழியாக பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் சிவபிரதாபன் பைக்கில் மோதினர்.

இதில் சிவபிரதாபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய 2 பேரும், கீழே கிடந்த சிவபிரதாபனின் செல்போனை எடுத்துக்கொண்டு தங்களது பைக்கில் தப்பினர். அவ்வழியாக சென்ற ஒருவர் அளித்த தகவலின்பேரில், 108 ஆம்புலன்சில் ஊழியர்கள் வந்து, சிவபிரதாபனை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஷியாமளா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். சிவபிரதாபன் பயன்படுத்திய வண்டி திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வண்டி என்பதாலும், அது மிகவும் பழைய வண்டி என்பதாலும் அவரது முகவரியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் விபத்து நடந்த இடத்தைச் சுற்றிலும் போலீசார் விசாரணை செய்தபோது யாருக்கும் சிவபிரதாபனை பற்றி தெரியவில்லை. இதனால் சிவபிரதாபன் ஸ்டான்லி மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி சிகிச்சை பலனின்றி சிவபிரதாபன் உயிரிழந்தார். தொடர்ந்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஷியாமளா மற்றும் அவரது குழுவினர் சிவபிரதாபன் குறித்த தகவலை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டினர். குறிப்பாக விபத்து நடந்த பகுதியில் இருந்து அந்த குறிப்பிட்ட வாகன ஓட்டிகள் சென்ற இடம் முழுவதிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை தொடர்ந்து சோதனை செய்தனர். அதில், 2 பேர் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியது தெரிந்தது. இதனிடையே, சிவபிரதாபனின் பைக் இன்சூரன்ஸ் சமீபத்தில் போடப்பட்டு இருந்தது. அதை வைத்து விசாரித்தபோது, உயிரிழந்தவர் சிவபிரதாபன் என்பது தெரிந்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சிவபிரதாபனின் உடலை அவரது மனைவி ஜெயாவிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சிவபிரதாபன் உயிரிழப்புக்கு காரணமான இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தப்பிய 2 பேர் பயன்படுத்திய பைக் 6 மாதத்திற்கு முன்பு வாங்கப்பட்டதை அறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், வட சென்னையில் அந்த பைக்குகள் எத்தனை விற்பனை ஆகியுள்ளது என்பதை கண்டறிந்தனர். அப்போது 54 பைக்குகள் விற்பனையாகியுள்ளதும், குறிப்பிட்ட அந்த வண்டியின் கலர் சில பேரிடம் மட்டுமே இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அந்த முகவரிகளுக்கு சென்று போலீசார் பார்த்தபோது, அந்த வாகனங்கள் எந்தவித சேதாரமும் இன்றி அனைவரிடமும் வீட்டில் இருந்தன. இதில், குறிப்பிட்ட அந்த பைக்கை வைத்திருந்த எருக்கஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த கவுதம் (20) என்பரிடம் போலீசார் விசாரணை செய்தபோது, அவர் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார். அப்போது, அவரது பைக் வீட்டில் இல்லை. அவரது பைக் எங்கே, என போலீசார் கேட்டபோது, சர்வீஸ் விட்டுள்ளதாக தெரிவித்தனர். அவர்கள் கூறிய சர்வீஸ் சென்டருக்கு போலீசார் போன் செய்தபோது, அந்த பைக் தங்களிடம் சர்வீசுக்கு வரவில்லை என தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார், நடத்திய தீவிர விசாரணையில், கவுதம் தான் விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவருடன், கவுதம் பைக்கில் சென்றபோது, பெரம்பூர் பகுதியில் விபத்து ஏற்பட்டு, ரமேசுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுதம், ரமேசுடன் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அப்போது, கீழே கிடந்த செல்போன் ரமேஷின் செல்போன் என நினைத்து அதனை கவுதம் தவறாக எடுத்து சென்றுள்ளார். மேலும், விபத்தை மறைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து பைக்கை சர்வீசுக்கு விட்டுள்ளோம் என வீட்டில் பொய் சொல்லி, அதனை எருக்கஞ்சேரியில் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ளனர். இதனையடுத்து மறைத்து வைத்திருந்த பைக்கை கைப்பற்றிய போலீசார் உயிரிழந்த சிவபிரதாபனின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர், எருக்கஞ்சேரி இந்திரா நகரை சேர்ந்த ரமேஷை நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post விபத்தில் கம்பெனி ஊழியர் உயிரிழந்த விவகாரம் பைக்கை மறைத்து வைத்து நாடகமாடிய வாலிபர் கைது: 50 சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Perampur ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...