×

சென்னையில் கடந்த ஆண்டை விட விபத்து மரணங்கள் 11 சதவீதம் குறைவு: கூடுதல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் விபத்து மரணங்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தாண்டு 11% குறைந்திருப்பதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரத்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் சாலை விபத்துகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கடுமையான விதிகள் அமலாக்கம் மற்றும் முறையான போக்குவரத்து ஒழுங்குமுறை மூலம் விபத்துகளை குறைத்து வருகிறது. அமலாக்கம் மற்றும் ஒழுங்கு முறை தவிர, சாலைப் பயனாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏனெனில் விபத்துகளைத் தடுப்பது ஒன்றிணைந்த பொறுப்பு என்பதால், எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், பாதுகாப்பு உபகரனங்களைப் பயன்படுத்தவும் மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்றுக்கொள்ளவும் மக்களை வலியுறுத்துகிறது. மேலும், விபத்துகளை தடுக்க பயனுள்ள மற்றும் திறமையான அமலாக்கத்துக்காக பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகளை கையாண்டு வருகிறது. சாலை விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை மேற்கொண்டு வந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலை சிக்னலில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான பதாகைகள் தாங்கி நின்றவாறு பள்ளி மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை பெருநகர சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது, போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் சரத்கர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு 573 சாலை விபத்து மரணங்களும், 2022ம் ஆண்டு 508 விபத்துகளும் ஏற்பட்டன. ஆனால், இந்தாண்டில் கடந்த 6 மாதங்களில் 11% விபத்துகள் குறைந்துள்ளது. இதனால் சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு விபத்துகள் நடைபெறும் 104 பகுதிகள் ஹாட்ஸ்பாட்டாக அறிவித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும், வழக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் தற்போது பள்ளி மாணவ, மாணவிகள் 350 பேரை கொண்டு சென்னையில் உள்ள முக்கிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

ஒரு இடத்தில் போக்குவரத்து விதிமீறலில் சிக்கிய வாகன ஓட்டிகள், மீண்டும் மற்றொரு ஜங்ஷனில் சிக்கினால் அவர்கள் மீது மீண்டும் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்யலாம். சாலைகளில் வாகன ஓட்டிகளின் வேக வரம்பு குறித்து அமல்படுத்துவது தொடர்பாக அரசிடம் ஆலோசனை நடத்தி ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும். சென்னையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை தானியங்கி முறையில் புகைப்படம் எடுத்து சலான் அனுப்பும் 150 ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் மேலும் 15 சந்திப்புகளில் பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post சென்னையில் கடந்த ஆண்டை விட விபத்து மரணங்கள் 11 சதவீதம் குறைவு: கூடுதல் ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kapil Sarathkar ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…