×

ஆட்களை திரட்ட பலே ஐடியா! ஆண்களுக்கு சேலை கொடுத்த பாஜ: அண்ணாமலை கூட்டத்தில் ஆன்மிக தலைவரின் ‘கிப்ட்’

தமிழக பாஜ மாநில தலைவராக உள்ள அண்ணாமலை செல்லும் இடங்கள் எல்லாம் கூட்டத்தை கூட்ட படும் கஷ்டத்தை அக்கட்சி நிர்வாகிகளே அறிவர். சமீபத்தில் அண்ணாமலை சொந்த ஊரான கரூரில் பாஜ சார்பில் மாநாடு என்று ஒன்று நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் போடப்பட்ட நாற்காலிகள் பெருமளவு காலியாகவே இருந்தது. மேடையின் அருகில் மட்டும் கூட்டம் இருந்தது. இந்த படத்தை டிவிட்டரில் ஷேர் செய்த பாஜவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம், ‘பொய்கள் கேட்க யார் வருவா?’ என கடுமையாக விமர்சித்திருந்தார். இதை பலரும் ஷேர் செய்து கிண்டலடித்தனர்.

இதுஒருபுறம் இருக்க மேடை அமைக்கப்பட்டதற்கு பணம் தரவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் விழா நடந்த இடத்திலேயே போராட்டமும் நடத்தினர். பாவம், அவர் வீட்டு வாடகையே நண்பர்கள்தான் கட்டுகிறார்கள். சரி அதை விடுங்க… கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை காரப்பாக்கத்தில் அண்ணாமலை பங்கேற்கும் போராட்டம் நடந்தது. இந்த விழா ஏற்பாடுகளை பாஜ பிரமுகர் லியோ சுந்தரம் செய்திருந்தார். இவர் ஏற்கனவே அதிமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து, கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்று, பாஜவில் இணைந்தவர். இவருக்கு பாஜவில் மாநில ஆன்மிக பிரிவு துணை தலைவர் பதவி தரப்பட்டுள்ளது.

இவர் கூட்டத்தை கூட்ட படாத பாடுபட்டார். யாரும் ஆர்வம் காட்டாததால் விநோத பொருட்களை தருவதாக சிலரை கூட்டி வந்தார். கூட்டத்துக்கு வந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சாலையோரம் அமர்ந்திருக்க அண்ணாமலை பேசிவிட்டு சென்றார். பின்னர் அங்குள்ள கோயில் அருகே ஆண்கள், பெண்கள் அனைவரையும் வரவழைத்து சேலைகள் கொடுக்கப்பட்டது. வழக்கமாக பெண்களுக்குதான் சேலைகள் கொடுப்பார்கள், ஆனால், பாஜவினர் சற்று வித்தியாசமாக ஆண்களுக்கும் சேலைகள் கொடுத்தது விநோதமாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post ஆட்களை திரட்ட பலே ஐடியா! ஆண்களுக்கு சேலை கொடுத்த பாஜ: அண்ணாமலை கூட்டத்தில் ஆன்மிக தலைவரின் ‘கிப்ட்’ appeared first on Dinakaran.

Tags : Baja ,Kipt ,Annamalai ,Tamil Nadu ,
× RELATED தேர்தலில் பண வினியோக பிரச்னை; போஸ்டர்...