×

150 பவுன் போலி நகை அடகு வைத்து ரூ.42 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை முயற்சி

கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே கவுந்தப்பாடி கனரா வங்கி நகை மதிப்பீட்டாளர் அங்கமுத்து (36). இந்த வங்கியில் பேராயூர், சலங்கபாளையம், தர்மாபுரி, அய்யம்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் நகை கடன் பெற்று வருகிறார்கள். அங்கமுத்து கடந்த 2022ல் வாடிக்கையாளர்கள் 10 பேரிடம், ‘‘என்னிடம் நகை உள்ளது. இங்கு வேலை செய்வதால் நான் அடமானம் வைக்க முடியாது. நான் நகையை தருகிறேன். உங்கள் பெயரில் நகையை அடமானம் வைத்து தாருங்கள்’’ என்று கேட்டுள்ளார்.

அதன்படி அவர்களும் நகையை அடமானம் வைத்து அங்கமுத்துவுக்கு உதவி செய்தனர். அதன்படி 6 மாதத்தில் 150 பவுன் நகையை வைத்து ரூ.42 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் வங்கி அதிகாரிகள் நகையை பரிசோதனை செய்ய வருவதை அறிந்து அங்கமுத்து மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அதிகாரிகள் நகையை ஆய்வு செய்தபோது 10 பேர் பெயரில் வைக்கப்பட்டிருந்த 150 பவுன் நகைகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் கவுந்தப்பாடி போலீசார் மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளில் அங்கமுத்து மீது வழக்குப்பதிந்து அவரை தேடி வந்தனர்.

விசாரணையில், மோசடி பணத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் அங்கமுத்து மைசூருக்கு தப்பிச்சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சிகிச்சைக்கு பின்னர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்துள்ளார். இந்நிலையில், போலீசார் தீவிரமாக தேடுவதையறிந்து இனி ஓடி ஒளிய முடியாது என்று அங்கமுத்து கவுந்தப்பாடி போலீசில் சரணடைய வந்தார். ரோந்து பணியில் இருந்த கவுந்தப்பாடி போலீசார் நேற்று முன்தினம் வழியிலேயே அவரை மடக்கி கைது செய்தனர்.

The post 150 பவுன் போலி நகை அடகு வைத்து ரூ.42 லட்சம் மோசடி செய்த நகை மதிப்பீட்டாளர் கைது: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Gopi ,Angamuthu ,Canara ,Bank ,Countappadi ,Erode district ,Berayur ,
× RELATED மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை...