×

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் முகாமில் தொழில் முனைவோருக்கு ரூ.556 கோடி கடனுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

திருப்போரூர்: மேலக்கோட்டையூரில் நடந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உதவி வழங்கும் முகாமில் தொழில் முனைவோருக்கு ரூ.556 கோடி கடனுதவியினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையங்கள் சார்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உதவி வழங்கும் முகாம் சென்னை அருகே மேலக்கோட்டையூரில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். எம்பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம்முகாமிற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கி, 1219 தொழில் முனைவோருக்கு, ரூ.556 கோடியே 6 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: தமிழ்நாடு முதல்வர் கடந்த 5ம் தேதி தலைமை செயலகத்தில் மாநில அளவிலான வங்கியாளர்கள் சிறப்பு கூட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கான கடன்களை விரைந்து வழங்க உத்திரவிட்டார்.

அதன் அடிப்படையில் 2023-24ம் நிதியாண்டில் தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சத்து 77 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ரூ.7087 கோடியே 91 லட்சமும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூ.3795 கோடியே 17 லட்சம் கடன் உதவி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் வழங்க வேண்டிய கடன் உதவிகள் இன்று இந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை தொழிலுக்கு இணையாக அதிக வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சமச்சீர் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, கிராமப்புற பொருளாதாரம், கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யும் மாவட்டங்களான காஞ்சிபுரம், சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் காஞ்சிபுரம் முதல் இடத்தில் உள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து பட்டு மற்றும் பட்டு சார்ந்த பொருட்கள் ஆட்டோ மொபைல், தோல் பொருட்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், பெட்ரோலியா பொருட்கள், மருந்து மற்றும் ரசாயன பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இதுவரை 1163 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.97 கோடியே 62 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையத்தில் முலம் சுயவேலை வாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.26 கோடியே 38 லட்சம் மானியத்துடன், ரூ.98 கோடியே 51 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 942 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டு உள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட தொழில் மையத்தில் முலம் இதுவரை சுயவேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் ரூ.18 கோடியே 65 லட்சம் மானியத்துடன், ரூ.60 கோடியே 63 லட்சம் வங்கி கடனுதவி வழங்கப்பட்டு 434 இளைஞர்கள் புதிய தொழில் முனைவோர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில், எம்எல்ஏக்கள் சுந்தர், செல்வப்பெருந்தகை, ராஜா, கருணாநிதி, எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், பாலாஜி, பாபு, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முடிவில், செங்கல்பட்டு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா நன்றி கூறினார்.

The post சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் முகாமில் தொழில் முனைவோருக்கு ரூ.556 கோடி கடனுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo.Anparasan ,Tiruppurur ,Melakottaiyur ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்