
புதுடெல்லி: மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்ட திருத்த மசோதா, மக்களவையில் அமளிக்கு மத்தியில் மூன்றே எம்பிக்கள் விவாதித்து அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி நடந்து வரும் நிலையில், அரசு தரப்பு வழக்கம் போல் அவசர அவசரமாக முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் உத்தியை தொடங்கி உள்ளது. மக்களவையில் நேற்று அமளிக்கு மத்தியில், பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்ட திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டுறவு துறை அமைச்சரான அமித்ஷா விவாதத்தில் பேசுகையில், ‘‘இந்த மசோதா மூலம் கூட்டுறவு துறையில் புதிய சகாப்தம் தொடங்கும். இதனை முந்தைய அரசாங்கள் நிராகரித்தன’’ என்றார். இதைத் தொடர்ந்து வெறும் 3 எம்பிக்கள் மட்டுமே சில நிமிடங்கள் பேசினர்.
அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மூலம் கூட்டுறவு சங்க துணை விதிமுறைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கொண்டு வரப்படும். இது மாநில அரசின் கீழ் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சி என தமிழ்நாடு உட்பட பல மாநில அரசுகளும் எதிர்த்து வருகின்றன. இப்படிப்பட்ட மசோதா, விவாதமின்றி மக்களவையில் நிறைவேறி உள்ளது. இதே போல, உயிரியல் பன்முகத்தன்மை சட்ட திருத்த மசோதாவும் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டு உடனடியாக அவை மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அரசியலமைப்பு (பழங்குடியின பட்டியல்) 5வது திருத்த மசோதா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
* கார்கே -கோயல் காரசார விவாதம்
மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரம் தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘மணிப்பூர், மணிப்பூர்’ என கோஷமிட்டனர். அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென விதி 267ன் கீழ் 50க்கும் மேற்பட்ட எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆனால் அரசு தயாராக இல்லை’’ என்றார். அதற்கு குறுக்கிட்ட ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், ‘‘உள்துறை அமைச்சர் பதிலளிக்க தயாராக இருக்கிறார். உண்மை எது, பொய் எது என்பதை அவர் விளக்குவார்’’ என்றார். அதற்கு பதிலடி தந்த கார்கே, ‘‘நிறைய பேர் இங்கு பேச விரும்பும் நிலையில், மணிப்பூர் நிலவரத்தை கூற பிரதமர் மோடி மட்டும் ஏன் இங்கு வரவில்லை. வெளியில், கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசும் அவர், அவையில் மணிப்பூர் பற்றி பேச வரமாட்டாரா?’’ என்றார். இதற்கு கோயல், ‘‘நாங்கள் மணிப்பூர், சட்டீஸ்கர், ராஜஸ்தான் என நாடு முழுவதும் நடக்கும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை பேச வேண்டுமென எதிர்பார்க்கிறோம்’’ என்றார். இதனால் சிறிது நேரம் இருவர் இடையே காரசார விவாதம் நடந்தது.
* சபாநாயகர் சமரச முயற்சி தோல்வி
மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது. இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினர். இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் விவாதம் முடிந்ததும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிப்பார் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி முதலில் விளக்கம் அளிக்க வேண்டும் என உறுதியாக தெரிவித்தன. இதனால் சபாநாயகரின் சமாதான முயற்சி தோல்வியில் முடிந்தது.
The post மக்களவையில் மூன்றே எம்பிக்கள் விவாதித்து பல மாநில கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா நிறைவேற்றம்: அமளிக்கு மத்தியில் அவசரம் காட்டும் ஒன்றிய அரசு appeared first on Dinakaran.