சென்னை: மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், ‘மணற்கேணி’ செயலி மூலம் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: ஆசிரியர்கள் கற்பித்தலுக்காக பயன்படுத்தும் துணை கருவிகளில் ஒன்றாக தரமான மற்றும் சுவாரஸ்யமான மணற்கேணி என்ற பெயரில் கற்போருக்கான புதிய செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலி பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி, அவற்றை அனைவருக்குமானதாக மாற்றும் நோக்கத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மணற்கேணி செயலி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 6 முதல் பிளஸ்2 வரை மாநில பாடத் திட்டத்தில் உள்ள பாடங்களை 27,000 பாடப் பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகைபிரித்து அதற்கேற்றப்படி காணொலி வாயிலான விளக்கங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது. மேலும் பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும் எதையும் விட்டுவிடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இச்செயலி இலவசமாக வழங்கப்படுகிறது. மற்றொரு புறம் கற்போரின் கற்கும் வேகத்திற்கு ஏற்ப பயன்படுத்தும் அளவிற்கு இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 முதல் பருவத்திற்கான பாடங்களோடு இச்செயலி வெளியிடப்படுகிறது. இந்த செயலியை பொருத்தவரை 12ம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களுக்கு இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்கள் எளிதாக அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மனப்பாடம் செய்துகொண்டு மட்டும் சென்று தேர்வு எழுதுவதைக் காட்டிலும் புரிதல் தன்மையுடன் பள்ளி மாணவர்களுக்கு அந்த அறிவை கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்த செயலி.
இந்த செயலியை யார் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து, வீட்டில் இருக்கின்ற படிக்கும் குழந்தைகளுக்கு பாடங்கள் குறித்து தெரிந்து கொள்ள கொடுக்கலாம். இந்த செயலியில் ஆசிரியர் பாடம் நடத்தும் வீடியோ மற்றும் 2டி, 3டி அனிமேஷன் மூலம் பாடம் குறித்து விளக்குகின்ற வகையில் அந்த வீடியோக்கள் அமைந்திருக்கின்றது. தற்போது கிட்டத்தட்ட 1000 வீடியோவுக்கு மேல் தயார் செய்யப்பட்டுள்ளது. எல்லா பாடங்களையும் சேர்த்து 7000 வீடியோக்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. உலகத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த செயலியை டவுன்லோட் செய்து அதில் பாடத்தை கற்றுக்கொள்ளலாம். இதற்காக இரண்டு வருடங்கள் மெனக்கெட்டு இதை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
The post மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் ‘மணற்கேணி’ செயலியில் பாடங்கள் அறிமுகம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.
