×

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் வகையில் 812 டிரைவர், கண்டக்டர்கள் தேர்வு செய்ய முடிவு: அரசு அரசாணை வெளியிட்டது

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 812 டிரைவர் மற்றும் கண்டக்டர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்துத்துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துத் துறைச் செயலர், போக்குவரத்து துறையின் மூத்த நிதி அலுவலர் ஆகியோருடன் நிதித்துறைச் செயலர் நடத்திய கூட்டத்தில், கும்பகோணம், சேலம், கோவை ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 60 சதவீத கண்டக்டர் காலிப்பணியிடங்களையும், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் 50 சதவீத கண்டக்டர் காலிப்பணியிடங்களையும் நிரப்பலாம் என முடிவு செய்யப்பட்டது.

அதேநேரம், டிரைவர், கண்டக்டர் பிரிவில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் யாராவது ஒருவர் விடுப்பு எடுத்துக் கொண்டாலும், பஸ்களை இயக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் உள்ளதைப் போல டிரைவர், கண்டக்டர் ஆகிய பணிகளை ஒரு சேர மேற்கொள்ளும் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை நியமிப்பதன் மூலம் பஸ்களை சீராக இயக்க முடியும். எனவே, இதர போக்குவரத்துக் கழகங்களிலும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியாளர்களை நியமிக்கலாம் என கடந்த ஆண்டு தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற செயலாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றைத் தவிர்த்து கும்பகோணம் – 174, சேலம் – 254, கோவை -60, மதுரை – 136, திருநெல்வேலி – 188 ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பிணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குநர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக இணையவழியில் விண்ணப்பங்களைப் பெற வேண்டும்.

அதே நேரம், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாகவும் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியலை பெற வேண்டும். தேர்வு பணிகளுக்கு சாலை போக்குவரத்து நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, தமிழில் எழுதவும், வாசிக்கவும் தெரிய வேண்டும். கனரக வாகன டிரைவர் லைசென்ஸ் (18 மாத அனுபவம்), கண்டக்டர் லைசென்ஸ் போன்றவை வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அடிப்படை மாத ஊதியம் ரூ.17,700 முதல் ரூ.56,200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் வகையில் 812 டிரைவர், கண்டக்டர்கள் தேர்வு செய்ய முடிவு: அரசு அரசாணை வெளியிட்டது appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporation ,Chennai ,Government of Tamil Nadu ,Government Government ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு...