×

முதல்வர் கோப்பை விளையாட்டு தொடர் வெற்றிகரமாக நிறைவு விளையாட்டு துறை சிறப்பாக செயல்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

 

சென்னை: மாநில அளவில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு 2023 தொடரை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை மிகச் சிறப்பாக செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மாநில அளவில் கடந்த 25 நாட்களாக நடைபெற்று வந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த சிறப்பு மிக்க விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை வழங்கிய துறை அமைச்சர் உதயநிதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. விளையாட்டு பிள்ளை என்று வளர்ந்து விட்ட பிள்ளைகளை பெற்றோர்கள் கூறுவது உண்டு. ஆனால், அந்த பிள்ளை விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்டு பெற்றோரை மகிழ்விக்கக் கூடிய பிள்ளையாக இருப்பதும் உண்டு. இந்த போட்டி மிக சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த விளையாட்டு துறை செயலாளர், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இதே அரங்கில் தான் கடந்த ஆண்டு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கம் மற்றும் நிறைவு விழா நடந்தது. அந்த விழாவில் வழக்கமான கலை நிகழ்ச்சிகளாகநடத்தாமல் இந்தியா, தமிழ்நாட்டின் பெருமைகளை வெளிநாட்டில் இருந்து வந்திருப்பவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பான கலை நிகழ்ச்சிகளாக நடத்தினோம். அதனை பாராட்டாதவர்களே இல்லை.

அந்த பெருமை அரசுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் சேரும். அந்த விழாவில் தான் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டேன். கூடவே மொத்தம் ஐந்து பிரிவுகளில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். அதனை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய துறை அமைச்சர் உதயநிதியை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இந்த ஆண்டு மே 8ஆம் தேதி முதல்வர் கோப்பை போட்டிக்கான கோப்பை, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினோம். ஜூன் 30-ம் தேதி தொடங்கிய முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று நிறைவு பெற்றிருக்கிறது. அமைச்சர் உதயநிதி புத்துணர்ச்சியுடன் விளையாட்டு போட்டிகளை நடத்தி இருக்கிறார்.

2006ல் இதே அரங்கில் தான் அமைச்சரானேன். உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்று அந்த துறையின் மூலம் ஏராளமான திட்டங்களை நடத்திக் காட்டியதை பார்த்த அன்றைய முதல்வர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை செயல்படும் விதத்தை பார்த்தால் பொறாமையாக இருப்பதாக தெரிவித்தார். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி செயல்பாடுகளை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. வெறும் விளம்பரத்திற்காக இதை சொல்லவில்லை. மிகவும் சிறப்பாக செயல்படுவதால் தான் இந்த துறையையும் அமைச்சரையும் அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி சிலம்பம் ஆகியவற்றை சேர்த்திருக்கிறோம். வழக்கமாக இந்த போட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும். இந்த முறை மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. 15 விதமான போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த முறை கிரிக்கெட், செஸ், பீச் வாலிபால் போட்டிகள் சேர்க்கப்பட்டன. போட்டிக்காக ரூ.51 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் பரிசுத்தொகையாக மட்டும் ரூ.28 கோடியே 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சிறப்பாக இந்த போட்டியை நடத்தியதால் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.மாநில அளவில் இருந்து 27 ஆயிரத்து 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகள் 17 இடங்களில் நடைபெற்றன. வீரர்களுக்காக 72 பேருந்துகள், மருத்துவ வசதிகள், 2000க்கும் மேற்பட்ட ஏசி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்துவது என்பது அந்த போட்டியில் எவ்வளவு பேர் பங்கேற்றார்கள் என்பதில் தான் இருக்கிறது. ஆயிரக்கணக்கானவர்கள் திரளாக பங்கேற்று இருப்பது பெருமைக்குரியதாகும். இந்த போட்டியை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகரப் போக்குவரத்து கழகம், எஸ்டிஏடி, சென்னை பெருநகர மாநகராட்சி, நல்வாழ்வுத்துறை, காவல்துறையினர் இணைந்து சிறப்பாக நடத்தியுள்ளனர்.

குழு ஒற்றுமை போட்டிகளுக்கு எவ்வாறு தேவையோ அதுபோல் இந்த போட்டியை நடத்தும் இந்த துறைகளும் குழு ஒற்றுமையுடன் விளையாட்டு வீரர்களுக்கு உரிய சிறப்பான சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கிறார்கள். அரசுக்கும் நற்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். மிகவும் குறைந்த நாட்களில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெகு சிறப்பாக நடத்திக் காட்டினோம். அப்போது வெளிநாட்டு வீரர்கள் மகிழும் வண்ணம் சூழ்நிலையும் வசதிகளையும் செய்து தந்திருந்தோம். சர்வதேச வீரர்களை மட்டுமல்ல உள்ளூர் வீரர்களையும் மரியாதையுடன் நடத்தும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. பரிசுகள் வழங்குவது மட்டும் அரசின் கடமை அல்ல. வீரர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதும் அரசின் கடமை. இந்த போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை மனதார பாராட்டுகிறேன். தனிநபர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம், வெற்றி பெற்ற குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ.9 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி என்பது போட்டியில் பதக்கம் பெறுவது மட்டுமல்ல… பங்கேற்பதும் களத்தில் போராடுவதும் தான் உண்மையான வெற்றி. எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம் என்பது உங்களுக்கு தெரியும். அதேபோல் முதல்வராக இருந்த கருணாநிதியும் விளையாட்டில் ஆர்வம் மிக்கவர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியை பாராட்டுவது அரசின் கடமை என்று அவரை கௌரவித்தார்.

கலைஞர் சிறந்த ஸ்டேட்ஸ்மேனாக மட்டுமின்றி, ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் உணர்வு கொண்டவராகவும் திகழ்ந்தார். இங்கிருக்கும் ஒவ்வொரு வீரர், வீராங்கனையும் மாநில, தேசிய, சர்வதேச அளவில் சாதிக்க இருக்கிறீர்கள். நீங்கள் எப்படி இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும் என்று உழைக்கிறீர்களோ அதுபோல்தான் நாங்களும். எங்கள் அணியும் இந்திய அணி தான். நாட்டின் நலன் கருதி இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று பாடுபடுகிறோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

* கால்பந்து அணிக்கு ரூ.60 லட்சம்

தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் கடந்த மாதம் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு அணிக்கு ஏற்கனவே அறிவித்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.60 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

* மணிப்பூருக்கு உதவி…

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: விளையாட்டு துறையில் ஆர்வம் மிக்க நமது முதல்வர், தினமும் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்துக் கொண்டே இருப்பார்கள். மணிப்பூரில் இப்போதுள்ள சூழ்நிலை உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அங்குள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டில் வந்து பயிற்சி பெறலாம் என்று அழைப்பு விடுத்த முதல் மாநில முதல்வர் நமது முதல்வர் தான். முதல் கட்டமாக மணிப்பூர் வாள்வீச்சு அணியினர் விரைவில் தமிழ்நாடு வரவுள்ளனர். அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசே செய்து தரும். தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளைக்கு இதுவரை ரூ.15 கோடியே 30 லட்சம் நன்கொடையாக கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்துவதால் ‘கேலோ இந்தியா’ இளையோருக்கான விளையாட்டுப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

* சென்னை மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன்

முதல்வர் கோப்பை விளையாட்டு தொடரில் சென்னை மாவட்டம் 61 தங்கப் பதக்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட விளையாட்டு நல அலுவலர், விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து முதல்வர் கோப்பையை பெற்றுக் கொண்டனர். 2வதுஇடத்தை செங்கல்பட்டு மாவட்டமும், மூன்றாவது இடத்தை கோவை மாவட்டமும் பெற்றன. களம் நமதே என்ற புத்தகத்தை முதல்வர் வெளியிட விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பெற்றுக் கொண்டார்.

The post முதல்வர் கோப்பை விளையாட்டு தொடர் வெற்றிகரமாக நிறைவு விளையாட்டு துறை சிறப்பாக செயல்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup sports ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu Sports ,CM Cup 2023 ,
× RELATED மூத்த பத்திரிகையாளர் சண்முகநாதன்...