×

எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?.. கருத்துக்கணிப்பில் ராகுல்காந்தி முதலிடம்

 

டெல்லி: எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்று கருத்துக் கணிப்பு நடத்தியதில் ராகுல்காந்தி முதலிடம் பெற்றுள்ளார். லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை அறிவித்துள்ளன.

இந்த கூட்டணியின் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போதைய கூட்டத்தில் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பட்டியலில் பலரின் பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரில் யாரையாவது ஒருங்கிணைப்பாளராக நியமிக்கலாம் என்று பேசப்படுகிறது.

இதுகுறித்து ஏபிபி மற்றும் சி-வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில், ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக யாரை நியமிக்க வேண்டும்?’ என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த சர்வேயில், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வேண்டும் என்று 31 சதவீதம் பேரும், நிதிஷ்குமாருக்கு 12% பேரும், மம்தா பானர்ஜிக்கு 8% பேரும், கெஜ்ரிவாலுக்கு 10% பேரும், சரத் பவாருக்கு 6% பேரும், தெரியாது என்று 33% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post எதிர்கட்சிகளால் உருவாக்கப்பட்ட ‘INDIA’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் யார்?.. கருத்துக்கணிப்பில் ராகுல்காந்தி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : INDIA' alliance ,Rakulkandi ,Delhi ,INDIA ,alliance ,Dinakaran ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி