×

புட் ட்ரக்கில் புதிய ருசி

வெளுத்துக்கட்டும் வெளிநாட்டு ரெசிபிகள்!

தள்ளுவண்டி கடைகளின் நியூ வெர்ஷன்தான் புட் ட்ரக். மின்னும் லைட்டுகள், தூரத்தில் இருந்தாலும் சாப்பிடத் தூண்டும் வகையிலான உணவுகளின் வாசனை, குறைந்த நேரத்தில் தயாராகும் புது வகை உணவுகள், நாவில் ஊறும் அசத்தலான சுவை என அனைத்தையும் தாங்கி நகரங்களில் வலம் வருகின்றன புட் டிரக்குகள். அந்த வரிசையில் புது வகை உணவுகள், சிறப்பான கவனிப்பு, சிரிப்பான பேச்சு அதோடு தூக்கலான சுவை என பெபினோ என்றபெயரில் பெசன்ட் நகர் பீச் அருகில் புட் ட்ரக் ஒன்றை நடத்தி வருகிறார் செல்வம்.

மெக்சிகன், பிரஞ்ச் உள்ளிட்ட பல நாட்டு உணவு வகைகளை குறைந்த நேரத்தில் தன்னைத் தேடி வரும் வாடிக்கையாளர்களுக்குத் தயார் செய்து தரும் செல்வத்திடம் பேசினோம்…“எனக்கு சொந்த ஊரு பாண்டிச்சேரி பக்கத்துல இருக்க கோட்டைக்காடுதான். 8ம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கேன். பொழப்பு தேடி 2003ல சென்னைக்கு வந்தேன். வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்னையும் வாழ வைச்சுட்டு இருக்கு. பொதுவாகவே நான் ஒரு உணவுப்பிரியன்.

எங்க வீட்ல அம்மா தனலட்சுமி செய்யும் உணவினை அருகில் இருந்தே பார்த்துக்கொண்டிருப்பேன். சில நாட்கள் நானே மார்க்கெட்டுக்கு சென்று சிக்கனை வாங்கி வந்து அம்மா சொல்லித்தருகிற பக்குவத்துல சமைப்பேன். முதலில் இப்படித்தான் சமைக்கத் தொடங்கினேன். அப்பா ஏழுமலைதான் என்னோட முதல் புட் ரிவியூவர். துவக்கத்தில் கேட்ரிங் சர்வீஸ் மூலம்தான் என்னோட உணவுப்பயணம் தொடங்கியது. கல்யாணம், காதுகுத்துன்னு எல்லா விஷேசத்துக்கும் சமையல் செய்து கொடுத்து வந்தேன்.

நண்பர்களோடு சேர்ந்து சென்னையில் பெரிய எம்என்சி கம்பெனிகளுக்கு மூன்று வேளையும் ஆர்டரின் பேரில் உணவு தயார் செய்து கொடுத்து வந்தேன். நல்ல வருமானம் கிடைத்தாலும், எனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. மெக்ஸிகோ, பிரஞ்சு ஸ்டைல் உணவுகளை நம்ம இந்தியா ஸ்டைலில், அதுவும் நம்ம சென்னைக்கு ஏற்றபடி கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் அதில் அனுபவமும் இருக்க வேண்டும். அதனால் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் குக்காக வேலைக்கு சேர்ந்தேன். நான் பணிபுரிந்த உணவகங்களில் அனைவரும் பிரஞ்ச், மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த செப்பா இருந்தாங்க.

அவர்களிடம் கேட்டு வெளிநாட்டு ஸ்டைலில் டேக்கோ, பெரிபெரி சிக்கன், மெக்ஸிகன் சிக்கன் போன்ற உணவுகளை தயார் செய்ய கத்துக்கிட்டேன்.இதை அனைத்தையும் எனக்கு தெரிந்த சினிமா நண்பர்களிடத்தில் செய்து கொடுத்து ரிவியூ கேட்பேன். ருசித்த அனைவரும் உணவில் இருக்கும் நிறை குறைகளை என்னிடம் சொன்னார்கள். அவர்கள் கூறிய குறைகளை மாற்றி, தயார் செய்த உணவினை அவர்களிடமே கொடுத்து ருசி பார்க்க சொல்வேன். செய்த டிஷ் அனைத்திற்கும் நல்ல ரிவியூ கிடைத்ததால் சென்னை பெசன்ட் நகர் பீச்சில் 2018ம் ஆண்டு இந்த பெபினோ ஃபுட் ட்ரக்கை தொடங்கினேன்.

மெக்ஸிகன் உணவுகளில் அதிகமாக வெள்ளரிக்காயை பயன்படுத்துவார்கள். அங்கு வெள்ளரியை பெப்பினோ என்றுதான் சொல்வார்கள். அதையே ஃபுட் ட்ரக்கிற்கு பெயராகவும் வைத்தேன்” என்று பேசிய அவர்…“பெபினோ ஃபுட் ட்ரக்கில் தயார் செய்த உணவுகள் அனைத்தையும் பெசன்ட் நகர் பீச்சில் நானே தோளில் பையை மாட்டிக்கொண்டு சென்று விற்பனை செய்வேன். அதை வாங்கி ருசித்த வாடிக்கையாளர்கள் உணவின் ருசிக்காக ஃபுட் ட்ரக்கை தேடி வர தொடங்கினர். ஒரு டிஸ்ஸை சாப்பிட்டு செல்லலாம் என்று வருபவர்கள் உணவின் ருசிக்காக மற்றொரு டிஸ்ஸையும் ட்ரை பண்ணிடுவாங்க.

அந்த அளவிற்கு தரமான ருசியில் எக் சீஸ் போல்ட், தெரியாக்கி சிக்கன், மெக்ஸிகன் சிக்கன் பாப்பர்ஸ் போன்ற பல நாட்டு உணவுகளை தயார் செய்து கொடுக்கிறேன். எல்லா உணவுகளையுமே நானே பார்த்து பார்த்து தயார் செய்கிறேன். காரணம் எந்த விதத்திலும் டேஸ்ட் குறைந்து விடக்கூடாது என்பதற்காக மட்டும்தான். கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டேன். அப்போது என்னுடைய மனைவி பிரீத்தியும், அப்பா, அம்மாவும்தான் எனக்கு துணையாக இருந்தார்கள். அதிலிருந்து மீண்டு வருவதற்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் உதவியாக இருந்தார்கள்.

வெளிநாட்டு ஸ்டைல் உணவுகளை நம்ம நாட்டு டேஸ்ட்டுக்கு மாற்றிக் கொடுக்கிறேன். ஆந்திராவில் காரம் அதிகம் சாப்பிடுவார்கள். ஆனால் நாம் அளவா மட்டுமே காரத்தை சேர்த்துக்கொள்வோம். சைனாவில் மீன், காய்கறின்னு பல உணவுகளை சமைக்காமலே சாப்பிடுவார்கள். ஆனால் நாம் உணவுகளை சுட்டோ, அவித்தோ மட்டுமே சாப்பிடுவோம். எங்கு இருக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் உணவினை தயார் செய்து கொடுத்தால் போதும். வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடி வந்து சாப்பிடுவார்கள். உணவகத்தில் வேலை செய்யும் அனைவருமே என் குடும்பத்தை சார்ந்தவர்கள்தான்.

ஃபுட் ட்ரக்கின் சுத்தத்திற்கு முக்கிய காரணம் அக்கா மரியம்மாள்தான். பெபினோவில் தயார் செய்யப்படும் அனைத்து உணவுகளுமே தனித்துவமான ருசியில் இருக்கும். இப்ப மசாலா மிர்ச்சி, சீஸ்ஸி நாசோஸ், பரிட்டோஸ் ரைஸ், கொசாடில்லா, டேக்கோஸ் ஆர்டு செல், ஆல்ஃபர்டோ பாஸ்தா, பின்க் சாஸ் பாஸ்தா, பேசில் கவோ பாட் ரைஸ், பெர்ரி சிக்கன், ஸ்குட் பேஸ்கட், காஜூன் பிஸ்ன்னு 100க்கும் அதிகமான வெளிநாட்டு டிஸ்ஸை நம்ம ஊரு ஸ்டைலில் கொடுத்துட்டு இருக்கிறேன். உணவகத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் நானே சென்று வாங்கி வருகிறேன்.

சீஸ், டேக்கோ போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்கி வந்து சமைக்கிறேன். பிரபலங்கள் பல பேர் இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம். அப்படி வருபவர்கள் சில புதிய டிஸ்களை சமைத்து தர சொல்லி சாப்பிடுவார்கள். அந்த டிஸ் நல்ல ருசியில் இருந்தால் அதனை மற்ற வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் தரும் அபிப்பிராயத்தை கருத்தில்கொண்டு அந்த டிஸ்ஸை மெனு கார்டில் சேர்ப்பேன்.உணவகத்திற்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உறவினர்கள் போலத்தான் பார்க்கிறேன்.

அதனால் அவர்களின் ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொண்டு உணவினை பார்த்து பார்த்து தயார் செய்கிறேன். ஓடி ஓடி உழைக்கும் அனைவரும் அவர்களுக்காக செலவு செய்வது என்றால் அது வயிற்றுக்கு மட்டும்தான். அதை கருத்தில் கொண்டுதான் உணவகத்திற்கு சாப்பிட வருபர்கள் மன திருப்தியோடு சாப்பிட்டு செல்ல வேண்டும் என்று இந்த பெபினோ ஃபுட் ட்ரக் உணவகத்தை இயக்கி வருகிறேன்’’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி
படங்கள்: மனோ

மெக்ஸிகன் சலூபா

தேவை:

வெதுவெதுப்பான பால் – 3/4 கப்
உப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்குத்
தேவையான அளவு
மைதா – ஒன்றரை கப்
பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்
உருகிய வெண்ணெய் – ஒரு டேபிள்
ஸ்பூன்

ஸ்டஃப்பிங் செய்ய:

வேகவைத்து லேசாக மசித்த ராஜ்மா- 1/2 கப்
வெங்காயம் 1 (மெல்லியதாகவெட்டியது)
குடைமிளகாய் 1 (மெல்லியதாகவெட்டியது)
தக்காளி – 1 (மெல்லியதாக வெட்டியது)
லெட்டூஸ் இலைகள் – 1/2 கப்
துருவிய சீஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வடிகட்டிய கெட்டித்தயிர் – 3
டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

மைதாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உப்பு, பேக்கிங் பவுடர், உருகிய வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அதனுடன் பால் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசையவும். இந்த மாவை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். பிறகு, அதை ஏழு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். ஒவ்வோர் உருண்டையையும் எடுத்து ஐந்து இன்ச் வட்டமான கெட்டியான பூரிபோல் திரட்டிக்கொள்ளவும். ஒரு முள்கரண்டியை எடுத்து பூரியின் மேல் முழுவதுமாகக் குத்தவும். கடாயில் எண்ணெய் வைத்து பூரிகளை மிதமான சூட்டில் பொரிக்கவும். பொரிக்கும்போது பூரியை இரண்டு கரண்டிகள் வைத்து பாதியாக மடக்கிவிட்டுப் பொரிக்கவும். பொரித்தெடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரின் மேல்வைத்து எண்ணெயை வடிய விடவும். லேசாக மசித்த ராஜ்மாவுடன் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ் கலந்து தனியாக வைக்கவும். பொரித்த பூரிகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் ராஜ்மா கலவையை வைக்கவும். நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், லெட்டூஸ் இலைகளை அதன் மேல் வைக்கவும். வடிகட்டிய தயிரை அதன் மேல் விட்டு சீஸ் தூவினால்
மெக்ஸிகன் சலூபா தயார்.

The post புட் ட்ரக்கில் புதிய ருசி appeared first on Dinakaran.

Tags : Putt Trucke ,put truck ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...