×

தீக்காயமும் இயன்முறை மருத்துவமும்!

நன்றி குங்குமம் தோழி

தீக்காயம் ஏற்பட்டு, பின் அதிலிருந்து மீண்டு எப்போதும் போல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி தனது வேலைகளை தானே பார்த்துக்கொள்ளும் பல நபர்களை நாம் தினசரி வாழ்க்கையில் பார்க்கிறோம். ஆனால், அவர்களை உற்று கவனித்தால் சில வித்தியாசங்கள் அவர்களிடம் இருப்பது தெரியும். அதாவது, சிலருக்கு கைகளில் தீக்காயம் இருந்தால் அவர்களால் கைகளை முழுதாக அசைக்க முடியாமல் மற்றொரு கையினை வைத்து சமன் செய்துகொள்வர். இன்னும் சிலர் முன்கழுத்து மாதிரியான இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர்களால் முழுமையாக கழுத்தினை அசைக்க முடியும்.

இந்த இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் முதலில் சொன்னவர் தீக்காயத்திற்கு சிகிச்சை பெறும்போது இயன்முறை மருத்துவமும் சேர்த்து செய்யாததுதான். இரண்டாம் நபரோ வலி இருப்பினும் இயன்முறை மருத்துவர் உதவியுடன் தொடர்ந்து அசைவுகளை ஆரம்பத்திலேயே மீட்டெடுத்ததுதான் காரணம். எனவே, உடல் சார்ந்த பல பிரச்னைகளுக்கு எப்படி இயன்முறை மருத்துவம் தீர்வு தந்து வருகிறதோ, அந்த வரிசையில் தீக்காயங்களில் இருந்து மீள எப்படியெல்லாம் இயன்முறை மருத்துவம் உதவுகிறது என்பதை இக்கட்டுரை வாயிலாக தெரிந்துகொள்வோம்.

தீக்காயம்…

உடலில் எந்த இடத்தில் எந்த வகையான தீக்காயம் ஏற்பட்டிருந்தாலும் அந்தக் காயத்தின் அளவினை குறிப்பிட்ட சில அளவுகோல்களை வைத்து முதலில் மருத்துவர்கள் கண்டறிவர். பின் அதற்கு தகுந்த மருத்துவம் அவர்களுக்கு வழங்கப்படும். எனவே அதைப் பொருத்து இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி கால இடைவெளிகள் விட்டு படிப்படியாக பயிற்சிகள் எடுத்துக் கொள்ளலாம்.

இயன்முறை மருத்துவம்…

முதற்கட்ட பயிற்சிகள்

* ரத்த ஓட்டம் சீராய் இருக்க அவ்வப்போது படுக்கும் நிலைகளை (Positions) மாற்றுவர்.

* கால்களும், தீக்காயம் ஏற்பட்ட இடங்களும் அசையாமல் வைத்திருப்பதால் வீங்கிவிடும். எனவே வீங்காமல் இருப்பதற்கு கால்களை மேலே தூக்கியவாறு அவ்வப்போது மாற்றி மாற்றி கட்டிவைப்பது, ‘ஸ்டாக்கிங்’ (Stocking) எனப்படும் இறுக்கமான துணி போன்ற ஒன்றை சுற்றிலும் கட்டி வைப்பர். இவ்வகை ஸ்டாக்கிங் போன்ற துணியினால் எந்த பாதிப்பும் தீக்காயம் பட்ட
சருமத்திற்கு ஏற்படுத்தாதவாறு கவனித்துக்கொள்வர்.

* ஒரே இடத்தில் நீண்ட நேரம் நீண்ட நாட்கள் படுத்திருப்பதால் படுக்கைப் புண் வரும் என்பதால் அடிக்கடி காயம் பட்ட இடத்திற்கு ஏற்ப உடல் நிலையினை (position) மாற்ற பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர்.

* காயத்தின் அளவு சிறிதளவு இருந்தால் சில பயிற்சிகள் அந்த காயத்தை சுற்றியுள்ள தசைகளிலும், மூட்டுகளிலும் செய்யலாம். (உதாரணமாக, முழங்கையில் காயம் இருந்தால் கை விரல்கள், மணிக்கட்டு, தோள்பட்டை போன்ற இடங்களை அசைக்காமல் வைத்திருந்தால் இறுக்கமாக மாறிவிடும் என்பதால், அதற்கான தக்க பயிற்சிகளை பரிந்துரைத்து அதனை முறையாக செய்வதற்கு கற்றும் கொடுப்பர்).

இரண்டாம் கட்ட பயிற்சிகள்

* காயம் மெல்ல ஆற ஆற காயமேற்பட்ட இடத்தில் மென்மையாக மசாஜ் (Massage) செய்வர். இதனால் காயம் ஆறிய பின் தடித்த தழும்பு இல்லாமல் இருக்க உதவும்.

* காயம் ஏற்பட்ட இடத்திற்கு அதற்கான அசைவினை கொடுப்பர். அதாவது, கழுத்தில் காயம் இருந்தால் முன் பின் கழுத்தினை அசைப்பது, வலது இடது புறம் அசைக்கச் சொல்வது என அனைத்தையும் செய்ய பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர். இப்படி செய்வதால் வளரும் புது சருமம் அதற்கு ஏற்ப நெகிழ்வாய் (Elastic) அமையும்.

* காயம் ஏற்பட்ட இடத்திற்கு முறையாக உடற்பயிற்சி செய்யவில்லை எனில் உள்ளிருக்கும் தசைகள் (Muscles), அதன் மேலிருக்கும் திசுப்படலம்(Fascia), அதன் மேல் கடைசியாக இருக்கும் சருமம் (Skin) என எல்லாம் இறுக்கமாக (Tightness) மாறிவிடும். தீக்காயம் ஆறிய பின்பும் இறுக்கம் மட்டும் இருப்பதால் அசைத்து எந்த ஒரு வேலையையும் செய்யமுடியாது என்பதால் முழுப்பலன் இருக்காது.

* கால்களில் காயம் ஏற்பட்டிருந்தால் நடக்க வைத்து பழகுவது, நிற்பதற்கு தேவையான உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுப்பது போன்றவற்றை செய்வர்.

* கைகளில் காயம் இருந்தால் மீண்டும் முன்பு போல கைகளில் வேலைகளை செய்வதற்கு பழக்குவர். சிறு பொருட்களான பென்சில் முதல் பெரிய பொருட்களான தண்ணீர் பாட்டில் வரை எல்லா வித பொருட்களையும் கையாள பயிற்சிகள் வழங்குவர்.

அறுவை சிகிச்சைக்கு பின்னும் * நரம்புகள் பாதித்து இருந்தாலோ, தசைகள் முதல் சருமம் வரை அதிக அளவில் காயம் இருந்தாலோ அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அப்படி அறுவை சிகிச்சை செய்த பின்பும் மேலே சொன்னவாறு இயன்முறை மருத்துவப் பயிற்சிகள் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே முழு குணமடைய முடியும்.

* இவ்வாறு சில அறுவை சிகிச்சைகளுக்கு மற்ற இடத்திலிருந்து அதாவது, கால் தொடையிலிருந்து ஒரு பகுதி தசையை எடுத்து அதனை எங்கு பாதிக்கப்பட்ட இடமோ அங்கு பொருத்தி அறுவை சிகிச்சை செய்வர். இதற்கு ‘கிராஃப்டிங்’ (Grafting) என்று பெயர். எனவே, பொருத்தப்பட்ட தசையை பாதிக்கப்பட்ட இடத்தின் அசைவுக்கு ஏற்றவாறு பழக்குவதற்கு இயன்முறை மருத்துவர் பயிற்சிகள் பரிந்துரைத்து கற்றுக் கொடுப்பர்.

இயன்முறை மருத்துவம் மற்றும் மற்ற மருத்துவர்கள் துணை கொண்டு, தீக்காயத்தால் பாதித்த இடத்தை முன்பு போல நிச்சயம் மீட்க முடியும் என்பதை இந்தக் கட்டுரை வாயிலாக ஒவ்வொருவரும் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

The post தீக்காயமும் இயன்முறை மருத்துவமும்! appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,
× RELATED உன்னத உறவுகள்