×

ஆசிரியர் சங்கங்களிடையே பிரிவினை ஏதும் இல்லை: ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி

சென்னை: தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கு.தியாகராஜன் கூறியதாவது: தமிழ்நாட்டில் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலை பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள், தொழில் கல்வி ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு படிநிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தனித்தனி பெயர்களில் சங்கம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கென துறை ரீதியான பிரச்னை, தனிப்பட்ட பிரச்னை, பொது பிரச்னை உள்ளன. பொதுப் பிரச்னைக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை உருவாக்கி பழைய ஓய்வு ஊதிய திட்டம் உள்ளிட்ட 15 வித பிரச்னைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், அந்தந்த துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசவே தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உள்ளிட்ட 22 சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த 22 சங்கங்களுடன் பள்ளிக் கல்வி இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். கடந்த மாதம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், கடந்த வாரம் தொடக்க கல்வி ஆசிரியர் சங்க கூட்டமைப்புடன் இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் தான் இந்த ஆசிரியர் முன்னேற்ற சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ஆனால் சிலர் ஆசிரியர்கள் இடையே கலகத்தை உருவாக்கும் வகையில் செயல்படுவதும், பேசுவதுமாக இருக்கின்றனர். ஆசிரியர் சங்கங்கள் எப்போதும் ஒன்று போலத்தான் உள்ளது. ஜாக்டோ-ஜியோ கூட்டணியில் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. தனிப்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசத்தான் இந்த கூட்டமைப்பு. சிலர் கூட்டமைப்பு பிளவு பட்டதாக கூறுவது தவறு. இவ்வாறு கு.தியாகராஜன் கூறினார்.

The post ஆசிரியர் சங்கங்களிடையே பிரிவினை ஏதும் இல்லை: ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Thyagarajan ,Chennai ,Tamil Nadu Teacher Advancement Association ,Tamil Nadu ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...