×

வாலாஜா அடுத்த கடப்பேரியில் வீடு கட்ட வசதியாக பட்டா நிலத்தை புலத்தணிக்கை செய்ய வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மொத்தம் 251 மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீர்வுகாண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

அதன்படி, வாலாஜா தாலுகா, கடப்பேரி கிராமம், அசோக் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், `நாங்கள் கடப்பேரி கிராமம், ராமாபுரம் பகுதியில் உள்ள மனைப்பிரிவு நிலத்தை வீடு கட்டுவதற்காக கிரையம் பெற்றுள்ளோம். இந்த மனைப்பிரிவு நிலம் தேசிய நெடுஞ்சாலையால் கையகப்படுத்தப்பட்டது போக மீதமுள்ள நிலத்தை 10 நபர்கள் கிரையம் பெற்றோம். ஆனால், இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நிலத்தை புலத்தணிக்கை செய்து பட்டா வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

சோளிங்கர் அம்மன் குளக்கரை பகுதியை சேர்ந்த பெண் அளித்த மனுவில், கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் கலெக்டர் மூலமாக எனக்கு பட்டா வழங்கப்பட்டது. நான் வறுமையில் வாழ்ந்து வரும் நிலையில் அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கி உதவிட வேண்டும் என கூறியிருந்தார். வாலாஜா தாலுகா, முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அளித்த மனுவில், காஞ்சனகிரி மலையில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரும் ஆகஸ்ட் மாதம் 8, 9 ஆகிய நாட்களில் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அப்போது, பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளதால் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

வாலாஜா தாலுகா, முகுந்தராயபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்களது கிராமத்தில் உள்ள காஞ்சனகிரி மலைக்கோயிலில் மாத பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. முகுந்தராயபுரம்- லாலாப்பேட்டை இடையே எல்லை பிரச்னையால் சுவாமி வழிபாடு செய்ய முடியவில்லை. வரும் ஆகஸ்ட் மாதம் 8, 9 ஆகிய தேதிகளில் ஆடிக்கிருத்திகை வருவதால் பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். எனவே, பக்தர்களின் நலன் கருதி காஞ்சனகிரி மலை மேல் பக்தர்களை அனுமதிக்க பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

முன்னதாக, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் வளர்மதி பெற்றுக்கொண்டார். அப்போது, பட்டப்படிப்பு முடித்து போட்டித்தேர்வில் பங்கேற்க தயாராகி வரும் மாற்றுத்திறனாளி இளைஞருக்கு ₹35 ஆயிரம் மதிப்பிலான ப்ரெய்லி படிப்பான் வழங்கினார்.இந்த கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் வள்ளி, கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொது) முரளி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post வாலாஜா அடுத்த கடப்பேரியில் வீடு கட்ட வசதியாக பட்டா நிலத்தை புலத்தணிக்கை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Walaja ,Patta ,Gadapperi ,Ranipet ,Ranipet Collector ,Kadapperi ,
× RELATED ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 கொத்தடிமைகள்...