×

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதல் நாளில் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு

*கலெக்டர் நேரில் ஆய்வு

நாமக்கல் : கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முகாம் நேற்று துவங்கியது. நாமக்கல் மாவட்டம் முழுவதும், முதல் நாளில் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. இப்பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாந்தோறும் ₹1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்த நாளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த வாரம் துவங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்தது.

இதையடுத்து, நேற்று விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம், தமிழகம் முழுவதும் துவங்கியது. தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, இப்பணிகளை துவக்கி வைத்தார். நாமக்கல் மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

முதற்கட்டமாக நேற்று மாவட்டத்தில் உள்ள 611 மையங்களில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்றது. இதற்காக அந்தந்த ரேசன் கடைகளின் அருகாமையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, முகாம்கள் நடைபெற்றது. மையங்களில் வருபவர்களுக்கு உதவி செய்ய பொறுப்பு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் குடும்பத் தலைவிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதனை நிரப்பிக் கொடுத்தனர்.

இதையடுத்து, விண்ணப்பம் பதிவு செய்யும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வித் திட்ட பணியாளர்கள், பயோமெட்ரிக் முறையில் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்தனர். ஒவ்வொருவருக்கும் தலா 2 முதல் 3 நிமிடங்கள் வரை நேரமானது. விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு பெண்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அனைத்து முகாம்களிலும் காலையில் 30 விண்ணப்பங்களும், மதியம் 30 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டது. நேற்று மாலை 6 மணி வரை முகாம் நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சி பகுதியில் 19 முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டது. நாமக்கல் கலெக்டர் உமா, நாமக்கல் நகராட்சி திருமண மண்டபம், சின்னவேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம், கீழேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுப்புளியம்பட்டி கிராம சேவை மையம், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாமினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார்.

மேலும், முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து முகாம் பொறுப்பு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆவணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, நகராட்சி ஆணையாளர்கள் சென்னுகிருஷ்ணன் ஜெயராமராஜா, தாசில்தார்கள் சக்திவேல், பச்சமுத்து, கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், பாஸ்கர், கஜேந்திர பூபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
நேற்று துவங்கிய முதற்கட்ட முகாம் வரும் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் மாவட்டம் முழுவதும் அனைத்து யைமங்களிலும், சுமார் 39 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் முதல் நாளில் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal… ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டத்தில்...