×

19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஒரே தாழியில் மீண்டும் 2 மண்டை ஓடுகள்

*தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி

செய்துங்கநல்லூர் : ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டை ஓடுகள் கிடைத்ததால் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒன்றிய தொல்லியல் துறையினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அகழாய்வு பணியில் இதுவரை 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விட பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்க்கோழி, மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அகழாய்வு பணியில் ஒரு கல் வட்டத்தின் நடுவே கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே முதுமக்கள் தாழியில் 2 மூடிகள் இருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் 2 மண்டை ஓடுகள் கிடைத்தது. மேலும் அதனுடன் கை, கால் எலும்புகள், முதுகெலும்பும் இருந்தது. இதனோடு சிறு சிறு பானைகளும், இரும்பால் ஆன உளியும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட 2 மண்டை ஓடுகளும் எந்த வகையிலான உறவுமுறையாக இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதற்கான தகவல் விரைவில் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தொல்லியல் ஆய்வில் 2 மண்டை ஓடு, ஒரே முதுமக்கள் தாழியில் கிடைத்து இருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆர்வலரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், தொல்லியல் என்பது இந்த மண்ணுலகில் பல்வேறு நிகழ்வுகளை உண்மை என பறைசாற்றுவது மட்டுமல்லாமல் பண்டைய கால மனிதர்களின் வாழ்விலை அனைவருக்கும் தெரியபடுத்தும் ஒன்றாகும். ஆதிச்சநல்லூரில் 2004ல் நடந்த ஆய்வின் போதே இதுபோன்ற 2 மண்டை ஓடுகள் ஒரே தாழியில் இருந்தது. தற்போது 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே முதுமக்கள் தாழியில் 2 மண்டை ஓடு கிடைத்துள்ளது.

ஏற்கனவே இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என்றால் பொருநை ஆற்றங்கரையில் இருந்துதான் எழுத வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த கூற்றையும் நிரூபிக்கும் வண்ணமாக பொருநை நாகரீகத்தில் தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளிவந்து கொண்டே இருககிறது. இது தொல்லியல் ஆர்வலரான எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது,
என்றார்.

உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது எப்போது?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும். அகழாய்வில் கண்டெடுக்கப்படும் பொருட்கள் அனைத்தும் அந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என கடந்த 2019 ஆம் ஆண்டு தெரிவித்தார். இப்பணிக்காக விரைந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகம் அருங்காட்சியகம் அமைய இருக்கும் இடத்தை ஆச்சநல்லூரிலேயே தேர்வு செய்து மத்திய தொல்லியல் துறைக்கு வழங்கியது. ஆனால் அதற்கான ஆரம்ப கட்ட கட்டிடப்பணிகள் கூட இதுவரை நடைபெறாமல் இருப்பது தொல்லியல் ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.

The post 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஒரே தாழியில் மீண்டும் 2 மண்டை ஓடுகள் appeared first on Dinakaran.

Tags : Adichanallur ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...