×
Saravana Stores

கலாசேத்ரா உள் புகார் குழு விவகாரம் : முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதா? : ஒன்றிய அரசு மீது சு. வெங்கடேசன் ஆவேசம்!!

சென்னை : கலாசேத்ராவை காப்பாற்றுவதில் காண்பிக்கிற அக்கறையில் கொஞ்சமாவது நாடாளுமன்ற நெறிமுறைகளை காப்பாற்றுவதில் காண்பியுங்கள் என்று சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் கலாசேத்ராவில் இருந்த பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான உள் புகார் குழு பற்றிய கேள்வி ஒன்றை (எண் 462/ 24.07.2023)நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன்.கலாசேத்ரா உள் புகார் குழு பற்றிய சர்ச்சை ஏதும் இருந்ததா? அதன் மீது என்ன நடவடிக்கை? உள் புகார் குழுக்கள் செயல்பாடு பற்றி கண்காணிக்க என்ன முறைமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? என்று நான் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது.

சர்ச்சை உள்ளதா முதல் கேள்விக்கு “இல்லை” என்று பதில் அளித்துள்ளார். ஆனால் இது தொடர்பான சர்ச்சை ஊடகங்களில் பெரிய அளவுக்கு நடந்தது. கலாசேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் அவர்களே உள் புகார் குழு உறுப்பினராகவும் இருந்தார். குழு உறுப்பினரை நியமிக்கிற இடத்தில் உள்ளவரே உறுப்பினராக தனனைத் தானே நியமித்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எல்லாம் எழுந்தது. இது தொடர்பான வழக்கும் ( ரிட் மனு 11764 / 2023) சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து அதில் இடைக் கால ஆணைகள் எல்லாம் பிறப்பிக்கப்பட்ட செய்திகள் வந்தன.ஆனால் ஒன்றுமே நடக்காதது போல அமைச்சர் பதில் அமைவது நாடாளுமன்றத்திற்கு தகவல்களை மறைப்பதாகும்.

அதை விடுத்து ஏப்ரல் 2023 இல் உள் புகார் குழு ஒன்று அமைக்கப்பட்டதாக பதிலில் தெரிவித்துள்ளார். அதற்கு முன்பு எந்த குழு இருந்தது? அதன்உள்ளடக்கம் என்ன? இது பற்றியெல்லாம் அமைச்சர் பதிலில் ஒன்றுமே இல்லை. ஆகவே மீறல்கள் குறித்த நடவடிக்கை பற்றிய கேள்விக்கு தனியாக பதில் அளிக்கவும் இல்லை. ஆனால் இது போன்ற சட்ட ரீதியான முறைமைகளின் செயலாக்கம் கலாச்சாரத் துறையால் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் தகவல்களிலேயே இவ்வளவு இடைவெளிகள்! கலாசேத்ராவை காப்பாற்றுவதில் காண்பிக்கிற அக்கறையில் கொஞ்சமாவது நாடாளுமன்ற நெறிமுறைகளை காப்பாற்றுவதில் காண்பியுங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கலாசேத்ரா உள் புகார் குழு விவகாரம் : முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதா? : ஒன்றிய அரசு மீது சு. வெங்கடேசன் ஆவேசம்!! appeared first on Dinakaran.

Tags : Kalashetra Internal Grievance Committee ,Union Govt. ,Venkatesan ,CHENNAI ,Kalasetra ,Kalasetra Internal Grievance Committee ,Dinakaran ,
× RELATED நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம்...