×

விடாது பெய்த அடைமழை… மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.!

போர்ட் ஆப் ஸ்பெயின் : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் கடந்த 20ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் 57, ரோகித் 80, கோஹ்லி 121, ஜடேஜா 61, அஷ்வின் 56 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் பிராத்வெய்ட் அதிகபட்சமாக 75 ரன் விளாசினார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 5, முகேஷ், ஜடேஜா தலா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

183 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா, அதிரடியாக விளையாடி 24 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 38, ரோகித் 57 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கில் 29 ரன், இஷான் கிஷன் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 365 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்திருந்தது. பிராத்வெய்ட் 28, மெக்கன்ஸி (0) இருவரும் அஷ்வின் சுழலில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தேஜ்நரைன் சந்தர்பால் 24 ரன், ஜெர்மைன் பிளாக்வுட் 20 ரன்னுடன் களத்தில் இருந்தனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு இன்னும் 289 ரன் தேவைப்பட்ட நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டம் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இருந்தும் ஏற்கனவே ஒரு போட்டியில் இந்தியா அணி வென்றதால் 1-0 என்கிற வெற்றி கணக்கில் இந்தியா அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய ஆட்டம் முழுதாக நடைபெறாத காரணத்தால் தொடர் நாயகன் விருது யாருக்கும் வழங்கப்படவில்லை.

The post விடாது பெய்த அடைமழை… மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி.! appeared first on Dinakaran.

Tags : West Indian Islanders ,Port of Spain ,West Indian Islands ,West Indies ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்...