
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், திடீரென அரசு கல்லூரி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியை 1961ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் காமராஜர் திறந்து வைத்துள்ளார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் கல்லூரியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், மதுராந்தகம், சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர், திம்மாவரம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுழற்சி முறையில் இரண்டு ஷீப்ட்டுகளாக பிகாம், பிஏ உள்ளிட்ட பாடப்பிரிவின் கீழ் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று வகுப்பறையில் மாணவ, மாணவிகள் பயின்று வரும்போது தீடிரென எதிர்பாராத விதமாக வகுப்பறை அருகே நடைபாதை மேற்கூரை இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக நடைபாதையில் மாணவர்கள் யாரும் செல்லாததால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேபோல், ஒருசில வகுப்பறைகளிலும் மேற்கூரை உதிர்ந்து விழும் சூழலும் ஏற்பட்டுள்ளது. மேலும், எந்த நேரத்திலும் விழுந்து விடுமோ என்ற அச்சத்துடன் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இக்கல்லூரியில் பழுதடைந்த வகுப்பறைகளை ஆய்வு செய்து உடனடியாக அவற்றை சீர்செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.
The post செங்கல்பட்டில் பரபரப்பு இடிந்து விழுந்த அரசு கல்லூரி மேற்கூரை: மாணவர்கள் பீதி appeared first on Dinakaran.