×

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி ஓதியூர் ஏரி பாதிக்காத வகையில் திட்டம் மாற்றம்: புதிய சீரமைப்பு வரைபடம் தாக்கல்: சிக்கல் தீர்ந்ததால் பணிகள் விரைவில் தொடங்குகிறது

சென்னை: கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகள் ஓதியூர் ஏரி பாதிக்காத வகையில் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் மெகா விரிவாக்க திட்டம் ஒன்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முன்னெடுத்துள்ளது. சென்னை மாமல்லபுரம் முதல் தென்கோடி கன்னியாகுமரி வரையிலான 697 கிலோ மீட்டர் கிழக்கு கடற்கரை சாலை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக சுமார் ரூ.24,435 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், இணைப்புச் சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாலங்கள் போன்றவை எந்தெந்த இடங்களில் தேவைப்படுமோ, அதற்கேற்ப விரிவான திட்ட அறிக்கைகள் உருவாக்கப்பட்டு, அதனடிப்படையில் வாகனம் பயணிக்கும் பாதைகள் மற்றும் நடை பயணிகளின் பாதைகள் உருவாக்கப்படும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலை திட்டப் பணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைத்து தரப்பினருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பிரத்யேக திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த இசிஆர் சாலையின் பெரும் பகுதி பசுமை போர்த்திய வயல்களுக்கு இடையில் செல்லும்விதமாகவும், அருகிலிருக்கும் நகரங்களுக்கு இடையூறு ஏற்படாதவாறும் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.

மாமல்லபுரம் – முகையூர் இடையிலான 31 கிலோ மீட்டர் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் முடிக்கப்படும். அடுத்தகட்டமாக, முகையூர் – மரக்காணம் இடையேயான 31 கிலோ மீட்டர் தொலைவு சாலைப் பணிகளுக்காக கடந்தாண்டு மே மாதம் ஒப்பந்தமானது. மேலும், மரக்காணம் – புதுச்சேரி இடையேயான 46 கிலோ மீட்டர் தொலைவுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் கோரியிருக்கிறது. இந்த பகுதிக்கு அடுத்த ஆண்டில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிக்கப்பட்டு தேவையான ஒப்புதல்கள் வழங்கப்பட இருக்கின்றன.

அதேபோல, புதுச்சேரி முதல் கடலூர் மாவட்டம் பூண்டியான்குப்பம் வரையிலான 38 கிலோ மீட்டர் சாலைப் பணிகளை வரும் நவம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இந்த பகுதியில் 42% சாலைப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே முடிக்கப்பட்டுவிட்டன. மேலும், பூண்டியான்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை 56 கிலோ மீட்டருக்கும், சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 55 கிலோ மீட்டருக்கும் 4 வழிச்சாலைப் பணிகள் நடைபெற இருக்கின்றன.

பூண்டியான்குப்பம் முதல் நாகப்பட்டினம் இடையேயான 113 கி.மீ தொலைவுக்கான சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம்- புதுச்சேரி இடையில் அமைந்துள்ள ஓதியூர் ஏரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. அங்கு எந்த ஒரு கட்டுமான பணிகளோ அல்லது மேம்பாட்டு திட்டங்களோ மேற்கொள்ள முடியாது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓதியூர் ஏரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிகப்பெரிய ஒன்றாக திகழ்கிறது. 10 கிமீ அகலமும் கொண்டது. பாசன டேங்குகள், விவசாய நிலங்கள், நீர்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்டவற்றில் இருந்து ஓதியூர் ஏரிக்கு நல்ல தண்ணீர் வந்த வண்ணம் இருக்கிறது. இது ஈர நில சூழலியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. மேலும் சதுப்பு நிலம், மணல் மேடு உப்பு நீர் படிமம் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஓதியூர் ஏரிக்கு உள்ளே மஞ்சள் நிற மார்க்கர் கற்களை கொண்டு வந்து அடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் நடவடிக்கை எடுத்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் மீனவ சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், இந்த பணிக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டது. அதனால் சாலை விரிவாக்க பணிகள் கிடப்பில் போடப்பட்டன. சுமார் 6 மாதங்கள் ஆன நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், தனது திட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஓதியூர் ஏரி அருகே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள முயற்சித்தது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஆய்வு செய்ததில் வலதுபுற பகுதியை விட்டுவிட்டு இடதுபுறத்தில் 3 மீட்டர் அளவிற்கு கூடுதல் நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் நிதி தேவைப்படும் என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி ஏரியில் விதி மீறல்கள் ஏதும் நடக்கக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் தடுப்பு சுவர் ஒன்றை கட்டி எழுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஓதியூர் ஏரி அருகே வழித்தடம் மட்டுமே மாறுகிறது. ஏரியில் இருந்து சில நூறு மீட்டர்கள் தள்ளி 4 வழிச்சாலை அமைப்பதில் எந்தவித சிக்கலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த சில வாரங்களில் பணிகள் வேகமெடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் புதிய சீரமைப்பு வரைபடத்தை சமர்ப்பிக்கும்படி மத்திய நிறுவனத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது. அதன்படி கடந்த 14ம் தேதி புதிய சீரமைப்பு குறித்த வரைபடத்தை தாக்கல் செய்தது. வரைபடத்தை மாற்றி அமைப்பதாக ஏற்கனவே தாக்கல் செய்துள்ளதால் இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி ஓதியூர் ஏரி பாதிக்காத வகையில் திட்டம் மாற்றம்: புதிய சீரமைப்பு வரைபடம் தாக்கல்: சிக்கல் தீர்ந்ததால் பணிகள் விரைவில் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : East Coast Road ,Othiyur lake ,Chennai ,Odiyur Lake ,Highways Department ,
× RELATED குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை...