×

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

சென்னை: சிங்கப்பூர் அரசு மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையிலான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்ட ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் வரும் 30ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்தவகையில் வரும் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு, முதல் ஏவுதளத்தில் இருந்து ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

இந்த ‘டிஎஸ்- சாட்’ என்ற பிரதான செயற்கைக்கோளை டிஎஸ்டிஏ (சிங்கப்பூர் அரசு) மற்றும் எஸ்.டி., இன்ஜினியரிங் இடையேயான கூட்டாண்மையின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் உடன் 6 செயற்கைக்கோள் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகிறது. 23 கிலோ எடை கொண்ட ‘விகிலேக்ஸ்- ஏஎம்’ என்ற தொழில்நுட்ப விளக்க மைக்ரோ செயற்கைக்கோள், ‘ஆர்கேட்’ என்ற வளிமண்டல இணைப்பு மற்றும் இயக்கவியல் செயற்கைக்கோள், ‘எக்ஸ்ப்ளோரர்’ என்ற ஒரு சோதனை செயற்கைக்கோள், ‘ஸ்கூப்-2’ என்ற 3யு நானோ செயற்கைக்கோள், கலாசியா-2 என்ற மற்றொரு 3யு நானோ செயற்கைக்கோள் மற்றும் ஓஆர்பி-12 ஸ்ட்ரைடர் செயற்கைக்கோள் ஆகிய 6 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. இந்த ‘டிஎஸ்- சாட்’ செயற்கைக்கோள் ‘இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ்’ (ஐ.ஏ.ஐ) உருவாக்கிய செயற்கை துளை ரேடார் கருவியை கொண்டுள்ளது. எனவே அனைத்து வானிலை தகவல்களையும், துல்லியமான படங்களையும் வழங்கும். இந்த மாத இறுதியில் ‘பி.எஸ்.எல்.வி. சி-56’ ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருப்பதால் இறுதி கட்டப்பணியில் விஞ்ஞானி ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,ISRO ,CHENNAI ,Government of Singapore ,ST Engineering ,Dinakaran ,
× RELATED வானிலை முன்னறிவிப்புகளின்...