×

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுநவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் குழு கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது

சென்னை: சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘நவீன தமிழ்நாட்டின் சிற்பி-கலைஞர்’ குழுவின் தலைவரும், அமைச்சருமான எ.வ.வேலு தலைமையிலும், இக்குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் ராஜகண்ணப்பன், அமைச்சர் மூர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது. குழுவின் உறுப்பினர் செயலர், பொதுப்பணித்துறை செயலாளர் சந்திரமோகன், வரவேற்புரை ஆற்றினார். பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில் :

விவசாயத்தில் முன்னணி மாநிலம், மருத்துவச் சேவைகள் வழங்குவதில் முன்னணி மாநிலம், உயர் கல்வியில் முன்னணி மாநிலம், தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலம், சட்டம் ஒழுங்கைக் காப்பதில் முன்னணி மாநிலம், அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வறுமையை தீர்த்ததில் முன்னணி மாநிலம், சாதி, மதவேறுபாடுகள் நீங்கிட இடஒதுக்கீடுகள் தந்து, சமத்துவ-சமுதாயம் படைப்பதில் முன்னணி மாநிலம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி, விவசாய உற்பத்திகள் பெருக, வழிவகுத்ததில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

1971ல், முதன் முதலாக, சிப்காட் தொழில் வளாகங்களை ஏற்படுத்தி, 1997ல், தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலைகளை உருவாக்கி “சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்“ எனப் புகழ்பெற செய்தவர் கலைஞர். தமிழ்நாட்டில் நெடுஞ்சாலையை நவீனப்படுத்தியவர். 1973 ஜூலை 1ல், சென்னை, அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டது.தமிழ்நாட்டு இளைஞர்கள், ஐ.டி. தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தியவர்.

1989ல், மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் என கொள்கை வகுத்தவர். 1999ல், “தமிழ்நெட்“ என கணினி மாநாடு நடத்தி, தமிழை கணினியில் இடம்பெறச் செய்தவர். இவ்வாறு அவர் கூறினார். அதனை தொடர்ந்த இக்ழுவின் பல்வேறு உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நீண்ட விவாதத்திற்கு பின்னர் முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், இக்குழுவின் உறுப்பினர்கள் அவர்களுடைய கருத்துகளை அவ்வப்போது தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

The post கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுநவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் குழு கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Sculptors' Committee of Modern Tamil Nadu ,Minister ,AV Velu ,Chennai ,Namakkal Poet's House ,
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...