×

மணிப்பூர் விவகாரத்தால் கடும் அமளி மீண்டும் முடங்கியது நாடாளுமன்றம்: விவாதம் நடத்த தயார் என அரசு தரப்பு அறிவிப்பு முதலில் மோடி பதில் தர எதிர்க்கட்சிகள் நிர்பந்தம்

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கியது. மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதம் நடத்த தயார் என அரசு தரப்பில் தெரிவித்தாலும், முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் ஓரணியில் உறுதிபட தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியதில் இருந்தே மணிப்பூர் விவகாரத்தால் தொடர்ந்து முடங்கி வருகிறது. வார விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் இரு அவைகளும் கூடின. காலையில் அவை கூடுவதற்கு முன்பாக, ஏற்கனவே அறிவித்தபடி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியது. மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணியாக வந்து, மகாத்மா காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், பிரதமர் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதித்த போது, இதே கருத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தினார். அதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா, ‘‘மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்த அரசு தயாராக இருக்கிறது. பதில் அளிக்கவும் தயாராக இருக்கிறது. ஆனால் விவாதத்திற்கு யார் பதிலளிக்க வேண்டுமென்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது’’ என்றார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மக்களவை துணைத் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அரசு விவாதம் நடத்த தயாராக இருப்பதாக உறுதி அளித்தனர்.

ஆனாலும் இதை ஏற்காத எதிர்க்கட்சிகள், முதலில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென ஓரணியில் திரண்டு கோஷமிட்டன. இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவை காலையில் கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தர வேண்டுமென கோஷமிட்டனர். இதனால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

* ஆம் ஆத்மி எம்பி சஸ்பெண்ட்
மாநிலங்களவையில் நேற்று பகல் 12 மணிக்கு தொடங்கியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங், அவைத்தலைவர் முன்பாக முற்றுகையிட்டு கோஷமிட்டார். அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர், சஞ்சய் சிங் பெயரை குறிப்பிட்டும் அவர் இருக்கையில் அமராமல் அமளி செய்தார். இதனால் அவையை நடத்த விடாமல் இடையூறு செய்ததால் சஞ்சய் சிங் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜ கட்சியின் மாநிலங்களவை தலைவர் பியூஸ் கோயல் தீர்மானம் கொண்டு வந்தார். அது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சஞ்சய் சிங்கை மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து அவைத்தலைவர் தன்கர் உத்தரவிட்டார்.

* 3 மசோதா தாக்கல்
மக்களவையில் கடும் அமளிக்கு நடுவே சுமார் 30 நிமிடம் அவை நடத்தப்பட்டது. அப்போது, டிஎன்ஏ தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதாவை அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த மசோதா 2019ல் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தற்போது நிலைக்குழு அறிக்கை சமர்பித்துள்ள நிலையில், மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுதவிர, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியர் மற்றும் பேறுகால உதவியாளர் ஆணையம் மசோதா, அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) சட்ட திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

* இரவு முழுக்க போராட்டம்
ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்தும், மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரியும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நேற்று இரவு முழுக்க நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்றும் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி சஞ்சய் சிங் அளித்த பேட்டியில், ‘‘எல்லா எம்பிக்களையும் போல நானும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென அவையில் வலியுறுத்தினேன். இந்த விஷயத்தில் பிரதமர் மோடி பயந்து ஓடி ஒளிகிறார். அவர் அவைக்கு வந்து பேசுவதற்கு தயாராக இல்லை’’ என்றார்.

* ஒழுக்கம், மரியாதையை காக்க கடும் நடவடிக்கை தேவை: துணை ஜனாதிபதி சொல்கிறார்
மாநிலங்களவையில் நேற்று ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறுகையில்,’ஒழுக்கம், அவை மரியாதையை காக்க சில நேரங்களில் கடுமையான நடவடிக்கைகள் தேவை. மாநிலங்களவை தலைவர் என்ற முறையில், எனது அதிகாரத்தின் கீழ் உள்ள அனைத்தையும் பயன்படுத்தி, மிகப்பெரிய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்ற மாண்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது உள்ளது. இதனால் சில சமயங்களில் நாம் விரும்பத்தகாத சூழ்நிலைகளை நாட வேண்டியிருக்கும். இதற்காக நாம் ஒருபோதும் தயங்கக்கூடாது. ஏனென்றால் அவை மரியாதையும், ஒழுக்கமும் நமது வளர்ச்சி, நற்பெயர் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுடன் தொடர்புடையது’ என்று தெரிவித்தார்.

The post மணிப்பூர் விவகாரத்தால் கடும் அமளி மீண்டும் முடங்கியது நாடாளுமன்றம்: விவாதம் நடத்த தயார் என அரசு தரப்பு அறிவிப்பு முதலில் மோடி பதில் தர எதிர்க்கட்சிகள் நிர்பந்தம் appeared first on Dinakaran.

Tags : manipur ,government party ,modi ,New Delhi ,Parliament ,Amali ,
× RELATED மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2...