×

செப்டம்பர் 30 தான் கடைசி ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவகாசம் வழங்கப்படாது: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: செப்டம்பர் 30ம் தேதிதான் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற கடைசி தேதி. அதற்குப்பின் காலஅவகாசம் வழங்கப்படாது என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுபற்றி மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்திரி கூறியதாவது: 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை. எனவே செப்டம்பர் 30ம் தேதிதான் கடைசி. புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் 87 சதவீதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. ஜூன் 30ம் தேதி நிலவரப்படி ரூ.84,000 கோடி மட்டுமே இன்னும் வங்கிகளில் மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை வழக்குகளில் 93% பேருக்கு தண்டனை: நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அமலாக்கத்துறையில் ஜூலை 13 நிலவரப்படி 25 சதவீதத்திற்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. அங்கு 2,075 ஊழியர்கள் பணியாற்ற அனுமதி உண்டு. தற்போது 1,542 ஊழியர்கள் உள்ளனர். கடந்த 9 ஆண்டுகளில், 31 சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்குகளின் விசாரணை நிறைவடைந்துள்ளது. இதில் 29 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 54 பேர் தண்டனை பெற்றுள்ளனர். இதனால் தண்டனை விகிதம் 93.54 சதவீதமாக உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் 16,507.86 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில் ரூ.4.64 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மொத்தம் 3,867 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இதில் 2021-22ம் ஆண்டில் மட்டும் 1,180 பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 18,252 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

The post செப்டம்பர் 30 தான் கடைசி ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவகாசம் வழங்கப்படாது: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of the Union ,New Delhi ,Union ,Union Government ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அமைச்சரின் தாய் மரணம்