திருச்சி: இம்சை அரசன் 23ம் புலிகேசி போல மணிப்பூரில் இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார்’ என்று முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். பெண்கள் சீரழிக்கப்பட்ட செய்தி உலகத்தையே குலுங்க வைத்திருக்கிறது.
வன்முறை நீடிப்பதை ஏன் அனுமதிக்கிறார்கள்?. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்றால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை. வெளிநாடுகளின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். ஆனால் இங்கே விவாதத்திற்கு தயாராக இல்லை. எனவே மணிப்பூர் சம்பவத்திற்கு மோடி பொறுப்பேற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்.
மோடியின் ஆட்சி, இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் போல் உள்ளது. அந்த படத்தில் இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி அந்த படத்தின் நாயகன் வடிவேல் வேடிக்கை பார்ப்பார். அதே போல மணிப்பூரில் இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தி பிரதமர் மோடி வேடிக்கை பார்க்கிறார். மணிப்பூரில் உள்ள தற்போதைய அரசு தொடரக்கூடாது, குடியரசு ஆட்சி ஏற்படுத்த வேண்டும். மக்களை பிளவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதிக்கவில்லை. பாஜ தலைவர் அண்ணாமலை, மணிப்பூர் குறித்து பேசுபவர்கள் வேங்கை வயல் பிரச்னை பற்றி தமிழகத்தில் யாரும் பேசவில்லை என்கிறார். அண்ணாமலைக்கு காது மந்தமாக கேட்கிறது. கண்ணும் தெரியவில்லை போல. பாஜவை தவிர மற்ற எல்லோரும் வேங்கைவயல் பிரச்னையை பற்றி பேசியுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை கும்பல். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஆர்.எஸ்.எஸ் தடை செய்ய வேண்டிய இயக்கம் தான். இவ்வாறு அவர் கூறினார்.
The post மணிப்பூரில் இரு சமூகங்களின் மோதலை இம்சை அரசன் 23ம் புலிகேசி போல பிரதமர் மோடி வேடிக்கை: முத்தரசன் தாக்கு appeared first on Dinakaran.