×

111 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13.48 கோடி வங்கி கடனுக்கான காசோலை: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி மனுக்களை பெற்றார். இப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 87 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 35 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 39 மனுக்களும், பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 61 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 76 மனுக்களும் என மொத்தம் 298 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக ஊரக பகுதியைச் சார்ந்த 82 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவி, நகர்ப்புற பகுதியைச் சார்ந்த 29 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3.48 கோடி மதிப்பீட்டிலான கடன் உதவி என மொத்தம் 111 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13.48 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிக்கான காசோலைகளை கலெக்டர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வழங்கினார்.

முன்னதாக நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருள்ராஜா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மதுசூதனன், மாவட்ட தொழில் மையம் துணை இயக்குநர் அன்புச்செழியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர், பேச்சுப் பயிற்சியாளர் காயத்ரி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post 111 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.13.48 கோடி வங்கி கடனுக்கான காசோலை: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,People's Grievance Day ,Thiruvallur District ,Collector ,Albi John… ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் கலெக்டர்...