×

ராஜபாளையம் அருகே மடத்துப்பட்டி கண்மாயில் நடுகல் சிற்பம், சதிக்கல் கண்டுபிடிப்பு: சாமியாக வழிபடும் பொதுமக்கள்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மடத்துப்பட்டி அருகே உள்ள கொண்டனேரி கண்மாயில் கல்சிற்பங்கள் இருப்பதாக சமூக ஆர்வலர் வினித் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர், தொல்லியல் ஆய்வாளர் கந்தசாமி அப்பகுதியில் களப்பணியில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி கண்மாயில் 2 நடுகல் சிற்பங்களும், ஒரு சதிக்கல்லும் கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்து கந்தசாமி கூறியதாவது, கல்சிற்பங்கள் அனைத்தும் கி.பி. 17ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக கருதப்படுகிறது. வீர மரணம் அடைந்த இரண்டு வீரர்களுக்கு தனித்தனியே எடுக்கப்பட்ட நடுகல் மற்றும் வீரன் இறந்தவுடன், மனைவியும் சேர்ந்து தீயில் விழுந்து, உயிரை மாய்த்துக் கொள்ளும் நிகழ்வுக்காக எடுக்கப்பட்ட சதிக்கல்லும் காணப்படுகிறது. முதல் நடுகல் சிற்பம்: முதல் நடுகல் சிற்பம் கூம்பு வடிவில் மாடக்கோவில் போல வடிவமைத்து மழை, வெயில் தாக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் சிற்பத்தில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையில் ஈட்டியை பிடித்துள்ளது போன்றும், வலது கையில் இடுப்பில் உள்ள வளைந்து நெளிந்த குறுவாளை கை வளையத்தில் இணைத்துள்ளது போன்றும் காட்டப்பட்டுள்ளது. வீரனின் வலது பக்க தலைக்கொண்டை அலங்காரம், வீரனின் உருண்டு திரண்ட கண்களும், முறுக்கு மீசையுடனும், பனை ஓலை காதணிகளை அணிந்தவாறும் சிற்பம் காணப்படுகிறது. இரண்டு காதுகள் மற்றும் கைகளுக்கு இடையில் துவாரங்கள் கொண்டு புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகலன்களும், கைகாப்பு, கைப்பட்டைகளும், இடை ஆடை குஞ்சம் வைத்து மடித்து கட்டப்பட்டுள்ளதும், இரண்டு கால் மூட்டுகளின் பாதுகாப்புக்காக மூட்டுக் கவசமும், காற்சிலம்பு அணிந்துள்ளதையும் இச்சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது நடுகல் சிற்பம்: இரண்டாவது நடுகல் சிற்பத்தின் மேல்பகுதி இரண்டடுக்கு மாட-கோபுர அமைப்பு போல வடிவமைக்கப்பட்டு, கீழே வீரன் ஒருவன் நின்ற நிலையில், குத்தீட்டியின் மேல்பகுதியை தனது வலது கை கொண்டும், கீழ்ப்பகுதியை இடது கை கொண்டும் பிடித்து தரையில் ஊன்றியபடி சிற்பம் அமைந்துள்ளது. வீரனின் இடது பக்க தலைக் கொண்டையலங்காரம், நீண்ட காதணிகள், கழுத்தணிகள், கைக்காப்பு, பூமாலை அலங்காரம், மார்பில் சன்ன வீரம், இடை ஆடையில் இடுப்பு பெல்ட் இணைத்து கட்டப்பட்டு குஞ்சம் தொங்கிய நிலையில், காற்சிலம்புடன் வீரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதிக்கல் சிற்பம்: மூன்றாவதாக, சதிக்கல் சிற்பத்தில் வீரனும், அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலதுபுறத்தில் அமர்ந்துள்ள வீரன் வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடக்கி வைத்துள்ள நிலையில், வீரனின் வலது கையில் வாள் ஒன்றை கையில் உயர்த்திப் பிடித்து இருப்பதும், இடது கையை கீழே மடக்கி வைத்திருப்பது போன்றும், அருகில் அமர்ந்துள்ள வீரனின் மனைவியின் வலது கையில் அல்லி மலரை உயர்த்திக் காட்டி இருப்பதும், இடது கையில் மங்கலப் பொருள் ஒன்றை வைத்திருப்பது போன்றும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கழுத்தணிகலன், கைகாப்பு ஆகியவையும் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. சிற்பத்தின் மேற்பகுதியில் மூன்று கர்ணக் கூடுகளில் சிங்கமுகங்கள் காட்டப்பட்டுள்ளது.
இம்மூன்று சிற்பங்களையும் கருப்புசாமி, கருப்பாயி, சுடலைமாடன் என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர். கண்மாயில் நீர்நிரம்பி இருக்கும் பொழுது சிற்பங்கள் நீருக்குள் மூழ்கி இருந்துள்ளது. இங்கு காணப்படும் வீரக்கல் மற்றும் சதிக்கல் சிற்பங்களைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன் வீரத்தை வெளிப்படுத்தும் வீர நிகழ்வுகள் இப்பகுதியில் நடந்துள்ளதை அறிய முடிகிறது. ராஜபாளையம் பகுதியில் பல சதிக்கல் சிற்பங்கள் காணப்படுவதால் பழங்காலத்தில் மக்களின் வாழ்வியல் சார்ந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும்’ என்று கந்தசாமி கூறினார்.

The post ராஜபாளையம் அருகே மடத்துப்பட்டி கண்மாயில் நடுகல் சிற்பம், சதிக்கல் கண்டுபிடிப்பு: சாமியாக வழிபடும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Madathupatti Kanmail Middle Stone Sculpture ,Rajapalayam, Satikkal ,Rajapalayam ,Kondaneri ,Madathupatti, Rajapalayam, Virudhunagar district ,Madathupatti Kanmail ,
× RELATED ராஜபாளையம் அருகே ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதி விபத்து