×

எஸ்.ஐ தேர்வில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கும், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களான கிரேஸ் பானு மற்றும் ரிஸ்வான் பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழ்நாட்டில் காவல் துறையில் காலியாக உள்ள 615 உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மே 5ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் பாலினத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பெண்ணாக தேர்வு செய்தவர்களுக்கு மகளிருக்கான 30 சதவீத இட ஒதுக்கீடு பொருந்தும்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. அதேபோன்று உடற்தகுதித் தேர்விலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. எனவே, தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்து, மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் சலுகைகளை வழங்கி திருத்த அறிவிப்பு வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வயது வரம்பு சலுகையும், சிறப்பு இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அந்த உத்தரவுகள் அனைத்தும் பரிந்துரைகள் போன்றவை தான். இந்த மனுவுக்கு செப்டம்பர் 26ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசும், சீருடைப் பணியாளர் தேர்வாணையமும் பதில் தர வேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர்.

The post எஸ்.ஐ தேர்வில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : S.S. ,Government of Tamil Nadu ,ICORD ,Chennai ,ICORT ,Dinakaran ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...