×

காவலர்கள், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு

சென்னை: 250 காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல் துறையினர் பொதுமக்களை நண்பர்களாகக் கருதி, அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. காவலர்கள் – மக்கள் தொடர்பை மேம்படுத்த காவல் பணியாளர்களுக்கு அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் காவல்துறை – பொதுமக்கள் இடையே “அன்பான அணுகுமுறை” என்ற நிலையை பேணிப்பாதுகாக்க இவ்வரசு உறுதிபூண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக 250 காவல் நிலையங்களுக்கு தலா 4 இலட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2023-2024ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், காவலர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு 250 காவல் நிலையங்களில், வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் போன்ற சிறப்பு வசதிகளை ஏற்படுத்திட ரூபாய் 10 கோடி வழங்குவதற்கு நிருவாக ஒப்பளிப்பு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இதன்மூலம், காவல் நிலையங்கள் நவீனமயம் ஆக்கப்படுவதோடு, அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அணுகக்கூடிய வகையிலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் இடமாகவும் காவல்நிலையங்கள் அமையும்.

The post காவலர்கள், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் காவல் நிலையங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வசதிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : G.K. Stalin ,Chennai ,Chief Minister ,MCM ,Department of the Guaranteed ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...