×

தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் காதலனை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற மனைவி: வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு

நவி மும்பை: தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் தனது காதலனை ஏவிவிட்டு கணவனை சுட்டுக் கொன்ற மனைவி உள்ளிட்ட இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை மாவட்டம் கர்ஜத் அடுத்த தேவ்பாடா பகுதியை சேர்ந்த ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் சச்சின் முர்பே (38). அவரது மனைவி அருணா முர்பே (36). சச்சினின் நண்பரும், தூரத்து உறவினருமான ருஷிகேஷூக்கும், அருணா முர்பேவுக்கும் கடந்த சில ஆண்டாக கள்ளக்காதல் இருந்து வந்தது. இதையறிந்த சச்சின், தனது மனைவியையும் நண்பரையும் கண்டித்தார். ஆனாலும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் சச்சினை கொல்ல ருஷிகேஷூவும், அருணாவும் திட்டமிட்டனர்.

அதன்படி தேவ்பாடா வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாட ருஷிகேஷை, சச்சினும் அழைத்து சென்றார். சச்சினின் கையில் வேட்டையாட பயன்படுத்தப்படும் துப்பாக்கி இருந்தது. வனத்துக்குள் சென்றதும், அங்கு சச்சினை ருஷிகேஷ் சுட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவானார். இதற்கிடையே கடந்த 15ம் தேதி முதல் தனது கணவரை காணவில்லை என்று உள்ளூர் போலீசில் அருணா புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தவாலே கூறுகையில், ‘கள்ளக்காதலுக்கு இடையூறாக சச்சின் இருந்ததால், அவரை வனப்பகுதிக்கு அழைத்து சென்று விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கியால் ருஷிகேஷ் சுட்டுக் கொன்றார். அதன்பின், அவரது உடலை காட்டில் புதைத்துவிட்டு, இருவரது செல்போன்களையும் அங்கு ஓடிய ஓடையில் வீசி எறிந்துவிட்டார்.

சச்சினை புதைப்பதற்காக பயன்படுத்திய மண்வெட்டியின் பிளேடு மற்றும் கைப்பிடியை வெவ்வேறு இடங்களில் வீசி எறிந்துவிட்டார். தனிப்படை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ருஷிகேஷ் மற்றும் சச்சினின் மனைவி அருணா ஆகியோரை கைது செய்துள்ளோம். சச்சினின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டதால், அவரது உடலை தோண்டியெடுக்க ருஷிகேஷை அங்கு அழைத்து சென்றோம். நிர்வாக மாஜிஸ்திரேட் கர்ஜத் முன்னிலையில், சச்சினின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. ஜே.ஜே. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சச்சினின் உடல் அனுப்பப்பட்டுள்ளது. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.

The post தகாத உறவுக்கு தடையாக இருந்ததால் காதலனை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற மனைவி: வனப்பகுதியில் புதைக்கப்பட்ட சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Navi Mumbai ,
× RELATED நவி மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!!